Friday, March 13, 2009

தல வெட்டப் போறாங்களாம்!!!அது ஒரு வெள்ளிக்கிழமை மதியம். நாங்க ஏதாவது ஷாப்பிங் பண்ணிட்டு வரலாம்னு தமாம்க்குப் போயிருந்தோம்.
காரை ஒரு மசூதிக்கிட்ட நிறுத்திட்டு திரும்பிப் பார்த்தா ஒரே கூட்டம். எல்லாம் கச முசன்னு பேசிக்கிட்டிருந்தாங்க!

நம்ம ஆள் ஒருத்தரிடம் கேட்டேன்: "என்னங்க கூட்டம்?"

"தல வெட்டப் போறாங்களாம்" (என்னவோ முடி வெட்டப்போறது மாதிரி சொன்னார்).

கொஞ்சம் அரண்டாலும், உள்ளே எட்டிப் பார்த்தேன்...

ரெண்டு ஆட்கள் கைகள் பின்னால் கட்டப்பட்டு மண்டி போட்டு வைக்கப்பட்டிருந்தாங்க..
மொத ஆள் கொஞ்சம் வயசானவர்... 40-45 வயசிருக்கும்.
ரெண்டாவது ஆள் 30-35 வயசுள்ள வாலிபர்.

ஒரு குள்ளமான சௌதி ஒரு கடுதாசியை வச்சுப் படிச்சார்..
(என் ஒடைஞ்ச அரபியை வச்சு புரிஞ்சிக்கிட்டேன்)

"மொத ஆள் ஒரு பாகிஸ்தானி... பள்ளிக்கூடத்தில பசங்களுக்கு போதைப் பொருள் விற்கும்போது பிடிச்சோம். குற்றத்தை ஒத்துக்கிட்டான். ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவத்துக்கு புதன்கிழமை தீர்ப்பு கொடுத்திருக்கு... அது மரண தண்டனை.. இப்போ தலையை வெட்டப்போறோம். ஏதாவது ஆட்சேபனை உண்டா?"

கூட்டம் உடனே, (லா லா மாபி) "இல்லை! இல்லை!" னு சத்தம் போட்டது!

அடுத்து - குள்ளமான சௌதி மறுபடியும் படிச்சார்..
"ரெண்டாவது ஆள் ஒரு சூடானி.. வேலை பாத்த வீட்டுப் பெண்ணைக் கற்பழித்து, கொன்னு ப்ரிட்ஜில் வச்சிட்டான். தப்பிக்கும்போது மாட்டிக்கிட்டான். திங்கட்கிழமை நடந்த சம்பவத்துக்கு வியாழக்கிழமை தீர்ப்பு கொடுத்திருக்கு... அது மரண தண்டனை.. இப்போ தலையை வெட்டப் போறோம். ஏதாவது ஆட்சேபணை உண்டா?"

மறுபடியும் கூட்டத்தினர், "இல்லை! இல்லை!"னு சத்தம் போட்டாங்க!

நான் குசுகுசுன்னு பக்கத்து ஆளிடம் கேட்டேன்... "ஏன் ஏதாவது ஆட்சேபணை உண்டா?" ன்னு கேக்குறாங்க.. அவர் சொன்னாரு.. "அந்தக் குற்றவாளி நிரபராதின்னு நிரூபிக்க தகுந்த ஆதாரம் இருந்தா, அத வச்சு இப்போ தண்டனையை நிறுத்திவிட்டுப் போய்டுவாங்க.. அப்புறம் கோர்ட்டில் சொல்லி விடுவிச்சுடலாம்.. நம்ம சொன்னதில் தப்பு இருந்தாலோ, சும்மா சொல்லிட்டாலோ நமக்கும் சேத்து ஆப்புதான்..!" (கோர்ட்டை அவமதிச்சதுக்கு...)

இப்போ ஸீனுக்குள்ள ரெண்டு பெரிய சௌதிகள் வந்தாங்க... அவங்களோட ஒரு டாக்டரும் ரெண்டு உதவியாளர்களும் ஒரு வேனில் வந்திருந்தாங்க... ரெண்டு பெரிய சௌதிகளும் ஒரு பெட்டியை எடுத்து, அதிலிருந்து வாள்களை தேர்ந்தெடுத்தாங்க..!

மண்டி போட்டிருக்கும் ஆட்களைப் பார்த்து என்னவோ சொல்லச் சொன்னாங்க.. அவங்களும் சொன்னாங்க! பாகிஸ்தானி அழுக ஆரம்பிச்சுட்டார்... ரொம்ப பாவமா இருந்தது.

சூடானி கலங்கவே இல்லை...(அட..போங்கடா! நீங்களும் ஒங்க ஒலகமும்னு நெனச்சிருப்பான்.)

ஒரு கணம்தான்... (ரொம்ப வேகமா வாளை இறக்கலை... சாதாரண வேகம்தான்..)

மொதல்ல.. பாகிஸ்தானி தலையை வெட்டினாங்க.. அது முழுசா வெட்டுப்படலை. காயை அறுக்கிற மாதிரி அறுத்துத் தள்ளினாங்க..! அந்த இடமே ரத்தமா போச்சு..!

பிறகு சூடானி தலையை வெட்டினாங்க.. துண்டா போய் விழுந்தது. ரத்தம் பீய்ச்சி அடிச்சது..!

ஒடம்பு தனியா துடிக்குது...! அதைப் பார்த்ததாலே கை, காலெல்லாம் வெட வெடன்னு ஆடிப்போயிட்டேன்.

அந்த டாக்டரும் ரெண்டு உதவியாளர்களும் விறு விறுன்னு ஒடம்புகளையும், தலைகளையும் சேத்து வச்சுத் தச்சு ஒரு பாலிதீன் பையில் போட்டு வேனில் ஏத்திட்டாங்க..!

எல்லோரும் கலைஞ்சு போய்ட்டோம். நானும் பல்வேறு எண்ணங்களுடன் காய்கறி வாங்கிக்கிட்டு திரும்ப வந்து அந்த எடத்தைப் பார்த்தா... ரெண்டு சின்னப் பசங்க ஓடி வெளையாடிக்கிட்டு இருக்காங்க..

அன்னிக்கு ராத்திரி (அந்த வாரம் முழுதும்) தூங்கவே இல்லை.

ஒரு நொடி முன்னால் வரை உயிருடன் இருந்த மனிதர்கள் அனைவர் முன்னிலையிலும் சட்டப்பூர்வமாக இறந்து போனார்கள்...

-என் நண்பர் ஒருவரின் வலைப்பூவில் படித்தது.. உங்கள் பார்வைக்காக இங்கே...

1 comment:

Nila said...

ada kaattu mirandingala....

செய்தியோடை...