Thursday, April 16, 2009

வந்துட்டாரு ஆய்தஎழுத்து சூர்யா.....

இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற மெசேஜை நேரடியாகவோ, மறைமுகமாகவோ சொன்னது, மணிரத்னம் இயக்கிய 'ஆய்த எழுத்து' திரைப்படம்.

அந்தப் படத்தில் வரும் சூர்யாவின் கதாப்பாத்திரத்தை சரத்பாபு வடிவில் நேரில் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ளனர், தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர்கள்.

ஆம், சரத்பாபு என்ற 29 வயது இளைஞர் தென் சென்னை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். ஏழை குடிசையில் பிறந்த அவர், இப்போது ஒரு தொழிலதிபர் என்றாலும், சினிமாவில் வருவது போன்று ஒரே பாடலின் போது எல்லாமே கிடைத்துவிடவில்லை.

முயற்சி. முயற்சி. முயற்சி.

தாயின் அரவணைப்புடன் இம்மூன்று மட்டுமே அவரது வெற்றிக்குத் தாரக மந்திரமாக இருக்கிறது.

சரத்பாபு : ஓர் அறிமுகம்

மடிப்பாக்கத்தில் ஒரு குடிசையில் பிறந்தவர். அவருடைய அம்மா மடிப்பாக்கத்தில் தெருவோரம் சிறு இட்லி கடை நடத்தியவர். அதன்மூலம் கிடைத்த வருமானத்தில்தான் சரத்பாபுவை படிக்க வைத்துள்ளார். அகமதாபாத் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்டில் எம்.பி.ஏ. பட்டம் பெற்ற சரத்பாபு, புகழ் பெற்ற பிட்ஸ்-பிலானியில் இன்ஜினீயரிங் பட்டமும் வாங்கியவர். இந்திய அளவில் இளைஞர்களின் போற்றுதலுக்குரிய அடையாளம் என்ற புகழ்ச்சி மிக்க 'யூத் ஐகான்' விருதும் பெற்றவர் இவர்.

ஐ.ஐ.எம்-மில் படித்தவர்களெல்லாம் பல லட்சம் மாத சம்பளத்தில் புகழ்பெற்ற நிறுவனங்களில் உயர் பதவிகளில் செட்டில் ஆவதும், வெளிநாடுகள் சென்று கோடிகளில் சம்பாதித்துவிட்டு திரும்பி வந்து டாம்பீக வாழ்க்கை வாழ்வதுமாக இருக்க...

தனியாக தொழில் தொடங்க முனைந்த சரத்பாபு கடன் வாங்கி உணவு விடுதி தொழிலில் இறங்கினார். இவர் முதல் முதலாக காலேஜ் ஒன்றில் கேன்டீன் துவங்கியபோது அதன் துவக்க விழாவுக்கு வந்து இவரை உற்சாகப்படுத்தியவர்,
இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி.

பொதுவாக ரிப்பன் வெட்டும் எந்த நிகழ்ச்சிக்கும் போகாத இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, சரத்பாபு முதல் முதலாக காலேஜ் ஒன்றில் கேன்டீன் துவங்கியபோது அதன் துவக்க விழாவுக்கு வந்து இவரை உற்சாகப்படுத்தினார்.

இப்போது சென்னை, கோவா, ஹைதராபாத் என நகரங்களிலும் உள்ள பல்கலைக்கழக கேன்டீன்களை நடத்திக் கொண்டு, சுமார் 300 பேருக்கு வேலைகளையும் கொடுத்து இருக்கிறார், சரத்பாபு.

அரசியல் நோக்கம் என்ன?

தனது வாழ்க்கையில் வறுமையின் வலியை உணர்ந்த சரத்பாபு, அப்படி ஒரு வறுமை தான் வாழும் சமூகத்தில் இருக்காமல் செய்ய வேண்டும் என்ற நோக்குடனும், அதற்கென அரசியல் துறை மூலமாக தன்னால் இயன்ற சேவைகளை செய்ய வேண்தும் என்ற எண்ணத்துடன்தான் தேர்தலில் களமிறங்கியுள்ளார்.

இளைஞர்களின் வரவேற்பும் உறுதுணையும்!

தென் சென்னையில் வேட்பாளராக களமிறங்கும் சரத்பாபுவுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இது, அவரது இணையதளம், ஃபேஸ்புக், ஆர்குட் போன்ற சோசியல் நெட்வொர்க் தளங்கள் போன்றவற்றில் இருந்தே தெரியவருகிறது.

சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்கள் சிலரும் சரத்பாபுவுக்காக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிவுலக வட்டத்தில் இளைஞர்கள் பலர் முன்வந்து சரத்பாபுவுக்காக தங்களின் பதிவுகள் மூலம் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

காத்திருக்கும் சவாலும் வாய்ப்பும்!

தி.மு.க. கோட்டை என்று வருணிக்கப்படும் தென் சென்னைத் தொகுதியில் சுயேச்சையாக நின்று வெற்றி பெறுவது என்பது சாதாரண காரியமல்ல.

திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, அதிமுகவின் ராஜேந்திரன், பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் இல.கணேசன் ஆகியோர் களமிறங்கும் இந்தத் தொகுதி சரத்பாபுவுக்கு சவால் நிறைந்ததுதான் என்றாலும் ஒரு விஷயத்தை நம்பிக்கை உண்டாகவேச் செய்கிறது.

கடந்த தேர்தலில் இந்தத் தொகுதியில் 47 சதவித வாக்குகள் மட்டுமே பதிவானது. ஆளும் கட்சி, எதிர்கட்சிகள் என அனைத்து தரப்பின் மீதும் அதிருப்தி அடைந்துள்ளதால் 53 சதவிகித மக்கள் வாக்களிக்கவில்லை என்று கருதும்போதும், தற்போதைய சூழலில் அதிருப்தி உள்ளவர்களுக்கு ஒரு மாற்றாக இருக்கக் கூடும் என்பதாலும் தீவிர பிரசாரம் செய்யும் பட்சத்தில் சரத்பாபு புயல் வீசினாலும் ஆச்சரியபடுவதில்லை.

தற்போது 49ஓ குறித்த விழிப்பு உணர்வு ஓரளவு இருக்கும் பட்சத்தில், தென் சென்னை வாக்காளர்கள் 49 ஓ-க்கு பதிலாக சரத்பாபுவை நாடக்கூடும்.

கிரிக்கெட்டில் மட்டுமல்ல... அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடியாது.

''என்னோட சின்ன வயசில எங்க அம்மா சாப்பாடு வேணாம்டானு சொல்லிட்டு, அடிக்கடி தண்ணி குடிச்சுக்கிட்டே இருப்பாங்க. 'தண்ணின்னா அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும் போலிருக்கு'னு சின்னப் பையன் நானும் நினைச்சுட்டு இருந்தேன்.


அப்புறம்தான் தெரிஞ்சது, இட்லி கடையில் கிடைக்கிற வருமானத்தை வச்சு அம்மா, நான், ரெண்டு அக்கா, ரெண்டு தம்பினு ஆறு பேர் எப்படி சாப்பிட முடியும்? அதான் எங்க அம்மா தண்ணீரை குடிச்சே வயித்தை நிறைச்சுட்டு இருக்காங்க.

ஆனாலும் என் வயித்துக்கும், அறிவுக்கும் பட்டினி போடாம நல்லா படிக்க வச்சாங்க. படித்து முடிச்சதும் பல லட்ச ரூபாய் சம்பளத்துக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்ல வேலை வாய்ப்புகள் வந்துச்சு.

எனக்கு அதெல்லாம் பெரிசா தெரியலை. எங்க குடும்பம் பட்டிருந்த கடனை அடைக்க ஒரு கம்பெனியில் கொஞ்ச நாள் வேலை செய்தேன். பிறகு, அம்மா நடத்தி வந்த அதே இட்லி கடையை நடத்த ஆரம்பிச்சேன்.

தாய் எட்டடி பாய்ஞ்சா, குட்டி பதினாறு அடி பாய்ஞ்சு ஆகணுமில்லையா? அதனால கடைய கொஞ்சம் பெரிசா ஆரம்பிச்சேன். சென்னை, கோவா, பிலானி, ஹைதராபாத்னு பல ஊர்கள்ல இருக்கும் பல பல்கலைக்கழக கேன்டீன்களை இப்ப நடத்திக்கிட்டு இருக்கேன்.

வருஷத்துக்கு ஏழு கோடி ரூபாய் புழங்கும் இந்த பிசினஸ் மூலமா சுமார் 250 பேருக்கு வேலையும் கொடுத்திருக்கேன்.

பணம் எந்த விதத்துலயும் என்னை மாத்திடலை. முன்ன இருந்த அதே மடிப்பாக்கம் ஏரியா வீட்லதான் இப்பவும் இருக்கேன்.

சின்னப் புள்ளையில இருந்து பாத்துப் பழகின மாமா பொண்ணைத்தான் கட்டிக்கிட்டேன். நான் டாக்டர் கிடையாது. ஆனா, ஸ்கூலுக்கு போற ஒரு பையனை பார்த்தாலே அவன் சாப்பிட்டிருக்கானா இல்லையான்னு கண்டுபிடிச்சுடுவேன். கண்டுபிடிச்சு என்ன பிரயோஜனம். அவன் சாப்பிட ஏதாவது வழி செய்யணுமில்லையா..?

அதனாலதான் தென்சென்னை வேட்பாளரா போட்டி போடறேன். நான் போட்டி போடறேன்னு கேள்விப்பட்டதுமே, எனக்கு அறிமுகம் இல்லாதவங்ககூட என்னோட சேர்ந்து எனக்காக வாக்கு சேகரிக்கிறாங்க.

அரசியல்னாலே ஒதுங்கிப் போறவங்களை, குறிப்பா இளைஞர்களை அரசியலுக்குக் கொண்டுவந்து அதை சேவை செய்கிற தளமா மாத்தணும்.

அதுதான் என்னோட ஒரே திட்டம்!'' என நெஞ்சை நிமிர்த்துகிறார் சரத்பாபு.

என்ன சொல்ல..?

ஒரு நல்ல குடிமகன் என்ற முறையில் தேர்தலில் வாக்கு அளிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வு இல்லாத சில இளைஞர்கள் மத்தியில்…

படித்த இளைஞர், சமூக அக்கறை கொண்டவர், அரசியலைச் சுத்தப்படுத்தத் துடிக்கும் இளம் ரத்தம் என்ற வகையில் தென்சென்னை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் நம்ம சரத்பாபுவுக்காக பிரச்சாரம் பண்ணுவோம் வாருங்கள்..!

டாக்டராகணும், எஞ்சினியராகணும், வக்கீலாகணும்… இப்படி பல துறைகளை அடுக்கிக் கொண்டே செல்லும் இளைஞர்களில் ஒரு சிலர் கூட அரசியல் துறையில் ஈடுபட வேண்டும் என்று மனமுவந்துச் சொல்வதில்லை. மக்களுக்கு நேரடியாகச் சேவையாற்றக் கூடிய அந்தத் துறையில் பொறுப்புள்ள இளைஞர்கள் அக்கறை செலுத்தாத காரணத்தினால்தான், அந்தத் துறை இப்போது தன்னலம் மிகுந்த பலரது கைகளில் சிக்கித் தவிக்கிறது. அதை மீட்டெடுக்காமல் முடங்கிக் கிடக்கும் இளைஞர்கள் மத்தியில்…

பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமே படிப்பு என்று நினைத்திருக்கும், மனத்தில் பதியச் செய்யப்பட்டிருக்கும் இளைஞர்கள் பலரது
மத்தியில்…

இதோ ஓர் உண்மையான அக்கறையுள்ள இளைஞர் சரத்பாபு...

நாம் தான் தென்சென்னைத் தொகுதியில் இல்லையே? நாம் எப்படி வாக்களிக்க முடியும் என்று கேட்கலாம். நாம் பிரச்சாரம் மட்டும் செய்வோம், அதுவும் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து கொண்டு..


ஏதோ என்னால் முடிந்த சிறிய உதவி...

1 comment:

Suresh said...

அருமையான பதிவு தலை... அவரிடம் கேள்வி கேட்டுக்கும் பலர் இதை படித்தாலே போதும் ...

செய்தியோடை...