Sunday, June 21, 2009

என்னை மன்னிப்பீர்களா அப்பா?


ஊரும் உறவும் உங்களை சுற்றி
I.C.U வில் நீங்களும்...
பல்லாயிரம் மைலுக்கு அப்பால் நானும்
செயலற்ற நிலையில்...

இந்த வாராத மகனை மன்னிப்பீர்களா அப்பா?

சிறு நெருஞ்சிமுள் குத்தினாலே
தாங்க முடியாத நீங்கள்
எப்படியப்பா துணிந்தீர்கள்?
ஐந்து மணி நேரம்
நெஞ்சை கிழித்து இதயத்தை காட்ட...

இந்த பத்து நாட்களில் என்னவெல்லாம்
நினைத்திருப்பீர்கள்?

அறிவியல் படித்த அகந்தையில்
இறைவனின் இருப்பையே மறுத்த எனக்கு
தெய்வமாய் தெரிகிறார்கள்
உங்கள் உயிர்காத்த மருத்துவர்கள்...

ஒருவேளை சிறுவயதில்
விளையாட்டாய் சொல்வது போல்
நான் "தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை" தானோ?
பாசமற்று பரதேசத்தில் கிடக்கிறேனே இன்று...

தலையில் தண்ணீரை அள்ளி அள்ளி
ஊற்றிக்கொள்கிறேன்...
ஆனாலும் நெஞ்சு கணக்கிறது...

எனக்கும் சொல்லுங்களேன்...
நெஞ்சில் சுமக்கும் ரணங்களை
நீரால் கழுவும் வித்தை
தெரிந்தவர் எவரேனும்?

.....

Thursday, June 18, 2009

தாவணியில் வந்த ஒரு நந்தவனமா?


கடந்த இரண்டு வாரங்களில்
மனசுக்குள்ள பல கவலைகள் இருந்தாலும்
அதையெல்லாம் தூக்கி ஒரு ஓரமா வச்சிட்டு
நம்ம கூடப் படிச்ச பயலுக்கு கல்யாணம்
நடக்கப் போறத நினைச்சா
ரொம்ப சந்தோசமா இருக்கு.

இராமச்சந்திரன்.

எங்க செட்டு பசங்களிலே இவன்தான்
முதலில் கல்யாணம் பண்ணப்போறான்.

நாங்கெல்லாம்
கல்லூரியில் சேரும் போது
Electronic circuits-ல
ஒரு மண்ணும் தெரியாது.

Bread board-லாம் என்னவென்று
எங்களுக்கு மூன்றாம் செமஸ்டர்
circuit lab பண்றப்ப தான் தெரியும்.
அதுவரைக்கும் நாங்க அது ஏதோ
பேக்கிரி ஐட்டம்னு நினைச்சிட்டு
இருந்தோம்.

ஆனா இவன் மட்டும் திருச்சி SIT ல
Diplamo in Instrumentation
முடிச்சிட்டு வந்த திமிர்ல
எல்லாமே தெரியும்னு
தெனாவட்டா உட்கார்ந்திருப்பான்.

சிலசமயம் எங்க வாத்தியாருக்கே
எதாவது சந்தேகம் வந்தா
இவன்தான் தீர்த்து வைப்பான்.

ஆளு வளரலைன்னாலும்
அறிவு வளர்ச்சி கொஞ்சம் ஜாஸ்தி.

நான் சௌதி வந்து சரியா ஆறு மாதம்
கழித்து அவனும் இங்க
வந்துட்டான்.
எனக்கும் அவனுக்கும் வெறும்
150 கி.மி தூரம் தான் இடைவெளி.

அவன் இங்க இருந்த ஒரு வருடக்காலமும்
சௌதியின் பல பகுதிகளுக்கு பறந்துட்டே
இருப்பான். ஏன்னா அவனோட வேலை அப்படி.
யான்பு, ஜித்தாஹ்,சொய்ஃபா,
ரியாத், கடைசியா அல்-ஜூபைல்.


விடிஞ்சா அவனுக்கு கல்யாணம்.

பொண்ணு போட்டோ-வ மெயில்
பண்ணச் சொன்னா, இதோ அனுப்புறேன்னு
சொல்லிட்டு கடைசிவரை
கண்ணுல காட்டவே இல்லை.

விடுவோமா நாங்க???

இரண்டு வாரங்களுக்கு முன்பு அவனை
வழியனுப்ப ஜுபைல் போயிருந்தேன்.

என் கல்லூரி நண்பர்கள்
ஆணந்த், ரஹிம், அஸ்பாக்
போன்றோரை சந்திக்கும்
வாய்ப்பும் கிட்டியது.

அவன் கொஞ்சம் அசந்த நேரமா
பார்த்து அவனோட லேப்டாப்-ஐ
பிரிச்சு மேஞ்சி தேடு-தேடுன்னு தேடி
ஒருவழியா C: -ல
ஒளிச்சு வச்சிருந்த பெண்ணோட
போட்டோ-வ பார்த்த எங்களுக்கு
பயங்கர ஷாக்!!!

பொண்ணு
ஸ்கூல் பிள்ளை மாதிரி இருக்கு.

அப்புறந்தான் சொல்றான்.
அது அந்த பொண்ணு பத்தாம் வகுப்பு
படிக்கும் போது எடுத்ததாம்.

இந்த போட்டோ-வ மட்டும் பார்த்துட்டு
ஓகே சொல்லிட்டியா?
அவன் பதில் சொல்லவே இல்லை.

பாவம் அவன் என்ன பண்ணுவான்?

முன்னெல்லாம் வகைவகையா
பார்த்ததால GOOD, BETTER, BEST-னு
தேடிட்டு இருப்போம்.

இப்போதெல்லாம் நம்ம ஊரு பொண்ணுங்க
யாரைப்பார்த்தாலும் அழகாத்தான் தெரியுறாங்க.

சமைக்கத் தெரியுமா டா?
அதற்கும் அவனிடம் பதில் இல்லை.

நமக்கும் இதே கதி தானா?

என் வாழ்க்கை துணையைப் பற்றி
பெரிதாக எதிர்பார்ப்பு இருந்தாலும்
சமையலை பொறுத்தவரை
மிக மெல்லிசாக தோசை சுடுவதற்கும்,
நல்ல சுவையான "டீ" போடத் தெரிந்திருந்தாலே
போதும்.
கண்டேன் என் சீதையை.

பொண்ணு அவனுக்கு நல்லா
பொருத்தமான ஜோடியா தான் இருந்திச்சு.
மாப்பிள்ளை இப்போ இந்தியா போயிட்டாரு.

சௌதி மாப்பிள்ளை கிடைக்க அந்த பெண்
மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

(எதிர்காலத்தில் எனக்கும் உதவும் என்பதால்
இக்கருத்தினை இங்கு பதிவு செய்ய
வேண்டிய நிர்பந்தம்)

இல்லையா பின்னே?

குடும்பத்தோட வண்டி கட்டிக்கிட்டு
பெண் பார்க்க போறோம்னு போய்
பஜ்ஜி சொஜ்ஜியெல்லாம் சாப்பிட்டுவிட்டு
பொண்ணுக்கு ஆடத் தெரியுமா?
தண்ணிக்குடம் தூக்கத் தெரியுமா? -னு
ஆயிரம் கேள்வி கேட்டு
குடைந்தெடுத்துவிட்டு கடைசியா
வீட்டுக்கு போயி யோசிச்சு பதில்
சொல்றோம்னு Infosys Company
HRD Manager மாதிரி லந்து
பண்ற இந்த காலத்துல,

மெயிலில் வந்த ஒரே ஒரு
போட்டோவை மாத்திரம் பார்த்து
(அதுவும் பத்தாம் வகுப்பு போட்டோ)
ஒகே சொல்லி ஊர் போய்
இறங்கி அடுத்த இருபதாம் நாள் திருமணம்.

வாழ்த்துகள்-டா மச்சான்.

மணமக்கள் இருவரும்
வாழ்வின் எல்லா வளமும் நலமும்
பெற்று பல்லாண்டு வாழ இறைவனை
வேண்டுகிறேன்.


மணமக்கள்:
இராமச்சந்திரன்.
பரமேஸ்வரி.


மணநாள்:
19/JUNE/2009

இடம்:
சூசையப்பர் திருமண மண்டபம்.
இலால்குடி.
திருச்சி.

எல்லாரும் வந்து வாழ்த்திட்டு போங்க...

Wednesday, May 27, 2009

என்னைப்பற்றி நானே (அன்புச்) சங்கிலித் தொடரில்...


இது ஒரு (அன்புச்) சங்கிலித் தொடர்.

நிலாவும் அம்மாவும் தொடங்கி வைத்து,
கை நீட்ட அன்போடு கோர்த்துக்கொண்டவர்களின்
வரிசையில் நானும்.

என் கையை அன்போடு இழுத்து இணைத்தவர்
நண்பர் நவாஸ்.

இதுவரை இணைந்தவர்கள்:

ரவீ
அத்திரி
கடையம் ஆனந்த்
ஹேமா
கார்த்திகைப் பாண்டியன்
குமரை நிலாவன்
சிந்துகா
தேவா
வேத்தியன்
அபு அஃப்ஸர்
அ.மு. செய்யது
தமிழரசி
இராகவன் நைஜீரியா
காயத்ரி
நவாஸ்
பாலா

இதுல நானுமா???


1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

என் முழுப்பெயர் பார்த்தசாரதி. என் தந்தை சூட்டிய பெயர்.
அதனாலே என்னவோ எனக்கு மிக பிடிக்கும்.
பார்த்தா-அர்ச்சுனன்; சாரதி-தேரோட்டி.
பாரத போரில் அர்ச்சுனனுக்கு தேரோட்டிய கிருஷ்ணாவின்
பெயரே பார்த்தசாரதி. கோகுலத்தின் கண்ணனை போன்று
என்னைச் சுற்றி No கோபியர்ஸ் Only அரேபியர்ஸ் மட்டும்.

மேலும் நான் ஹிந்து பத்திரிக்கைக்கு கடிதம் எழுதுபவனுமல்ல..


2. கடைசியாக அழுதது எப்பொழுது?

பதினைந்து மாதத்திற்கு முன்னால், பெட்டியை தூக்கிகொண்டு
சௌதி கிளம்பும்போது அம்மா அழுததால்
என் கண்ணிலும் லேசா..


3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ஓஹோனு இல்லையென்றாலும் ஓரளவுக்கு பரவாயில்ல..
என் இடது பக்க மூளை சிறப்பா செயல்படுறதால
வலது கையால இதுவரைக்கும் ஏதும் எழுதினது இல்ல..
left hand writer,brusher,bowler, etc...
சாப்பிடுறதுக்கு மட்டும் கஷ்டபட்டு ரைட்டுல பழகிட்டேன்.


4. பிடித்த மதிய உணவு என்ன?

அம்மா செய்யும் உருளை கிழங்கு வறுவலும்,
தக்காளி ரசமும்.

இப்போ அதெல்லாம் இல்ல.

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட
நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

என் உள்ளத்து உணர்வின் படியே.
அவர்களின் அணுகுமுறையிலே
தான் இருக்கு என் முடிவு.
எனக்கு நண்பர்கள் அதிகம்...
எதையுமே எதிர்பார்க்காமல் ஓடிவந்து தோள்
கொடுக்கும் என் கல்லூரி கால நட்புகள் தான்
என்னை இன்றளவும் சிலிர்க்க வைக்கிறது.

6. கடலில் குளிக்க பிடிக்குமா, அருவியில் குளிக்க பிடிக்குமா?

இரண்டுமே பிடிக்கும். சுனாமிக்கு பிறகு வேளாங்கண்ணி
கடல் பொலிவிழந்து விட்டது. போன குளிர்காலத்தில்
நண்பர்களோடு சேர்ந்து நடுநடுங்க இராஸ்தனுரா
கடலில் கூட நீந்தினோம்.

எங்கள் வீட்டுக்கு முன்புறம் பெரிய
தாமரைக்குளம் ஒன்று உண்டு.
அதனை ஒட்டிய ஆலமரத்தின் கிளையொன்றிலிருந்து
தலைகுப்பற தண்ணீருக்குள் பாய்வதை இப்போது
நினைத்தாலும் முதுகுதண்டில் ஜிலிரென்றிருக்கிறது.
தரையில் இருந்த நாட்களை விட தண்ணிரில்
மிதந்த நாட்கள் தான் அதிகம்.
காவிரி பாயும் கடைக்கோடியிலிருக்கும்
திருத்துறைப்பூண்டி எனது சொந்த ஊர்..

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முகம் பார்த்துதான்.
அப்படியெல்லாம் முதல் பார்வையிலே
யாரையும் எடைபோடும் திறமை எனக்கில்லை.


8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடிச்ச விஷயம்:

எதையுமே மிக எளிதாக எடுத்துக்கொள்ளும் மனப்பாங்கு.
நம்மள மீறி என்ன நடந்திட போகுதுங்கிற தெனாவட்டுனு
கூட சொல்லலாம்.

பிடிக்காத விஷயம்:

தொப்பைய குறைக்க ஜிம்முக்கு போகலாம்னு
நாலு மாசத்துக்கு முன்னாடியே பிளான் பண்ணியும்
இன்று வேண்டாம்,நாளைக்கு நிச்சயம் போகலாமென்ற
(நாசமாப் போன) என் நம்பிக்கைதான்.

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

இந்த கேள்விக்கு பதில் சொல்ல ஆசையாத்தான் இருக்கு.
ஆனா என்ன செய்ய.


10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

என் தங்கையோட குட்டி பையன் ஆதிஷ்,
பிறந்து ஒரு வயசாகியும் இன்னும் நேர்ல பார்க்கலை.
போட்டோஸ்ல மட்டும்தான்..
சீக்கிரம் போய் பார்க்கனும்.


11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

வெள்ளை சர்ட், அதுக்கு மேட்சிங்க ஒரு பேண்ட்
கலர் சரியா சொல்லத் தெரியல.

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?

ISAIARUVI.COM-ல "ஒரு கல் ஒரு கண்ணாடினு" யுவன் பாடிட்டு இருக்கிறார்.

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

வெளிர் நீல நிறம்..

14. பிடித்த மணம்?

வேறென்ன என் திருமணம் தான்.

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

நட்புடன் ஜமால்: பின்னூட்ட புயல். இவரின் "இரவிலும் உதிக்கும் வானவில்"
படித்ததால் ஏற்பட்ட பாதிப்பு. இவர் பதிவில் உள்ள படங்களும் கவி பேசும்.
தரமான பின்னூட்டங்களின் சொந்தக்காரர். பெரும்பாலன பதிவர்களின்
பதிவை முதலில் சுவைப்பது இவர்தான்.

ஷர்வினா-வின் அப்பா: இவர பத்தி நான் சொல்லி தெரிய வேண்டியதில்ல.
24 மணி நேரமும் இணையத்திலே இருப்பாரு.
ஒரு நாளைக்கு ஒரு பதிவு கூட போடலைனா மண்டையே
வெடிச்சிடும் இவருக்கு.
பல வம்பு வழக்குகளில wanted-அ ஆஜராவாரு.
நல்ல பல பதிவுகளை தருபவர்.

குறிப்பு:
மேற்கண்ட இருவரும் பிரபல பதிவர்கள் என்பதால்
இதை தொடர்வார்களா என்று சிறிய சந்தேகம்.

தொடர மறுத்தாலும் சரியானவர்களையே
அழைத்த மனத்திருப்தியே எனக்கு போதும்.


16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு?

நவாஸ்:என்னை போலவே வளைகுடாவில்
வாடும் ஒரு ஜீவன். குறுகிய கால பழக்கமே
என்றாலும் இவர் என்னிடம் எடுத்துக்கொண்ட
உரிமை நெஞ்சை நெகிழச் செய்கிறது.
"இதுதான் gulf"-னு இவரேட பதிவுல,
எங்களோட வாழ்க்கை முறையை
ரத்தினச்சுருக்கமா சொல்லியிருக்காரு..
இன்னும் பல பதிவுகள் இவரை பற்றிய
மதிப்பை பன்மடங்கு உயர்த்தியிருக்கிறது....
இதுவரைக்கும் பேசுனதில்ல..
நவாஸ் தொலைபேசி எண்ணை எனக்கு தருவீங்களா?


17. பிடித்த விளையாட்டு?

ஒருகாலத்துல கிரிக்கெட்,
இப்போ ரொம்ப யோசிக்க வேண்டியிருக்கு.

18. கண்ணாடி அணிபவரா?

ம்ஹும்.

19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

கமல் படமெல்லாம் பிடிக்கும்.
இப்படித்தான்னு ஒரு வரைமுறை இல்லை.

20. கடைசியாகப் பார்த்த படம்?

"INSIDE" னு ஒரு FRENCH படம், குருரத்தின் உச்சக்கட்டம்..
தனியா யாரும் பார்க்காதீங்க...
பார்க்கனுமா???

21. பிடித்த பருவ காலம் எது?

டிசம்பரின் முடிவும், ஜனவரியின் ஆரம்பமும்..

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

தற்போதைக்கு ஒன்னும் இல்ல.
கடலை மடிச்சு தந்த பேப்பரக்கூட ஒருவரி விடாம
வாசிச்சு வளர்ந்தவன்..
காலம் மாறிப்போச்சு.

23. உங்கள் டெஸ்க்டாப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

அரைமணிக்கொரு தடவை அதுவா மாறிக்கிட்டே இருக்கும்.
உபயம்: jhon's Background Switcher மென்பொருள்...

24. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம்:
OFFSHORE PROJECT-ல இருக்குறதுனால தினமும்
ஒரு மணி நேரம் BOAT-ல பயணம்.
அந்த BOAT சத்தத்துல லைப் ஜாக்கெட்ட மாட்டிக்கிட்டு
தூங்குறது தனி சுகம்.

பிடிக்காத சத்தம்:
அந்த நேரத்திலயும் காதுக்குள்
கத்தும் பிலிப்பைனியர்கள்.
கொடுமை...

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

சௌதி வந்தது தான் அதிகபட்சம்..

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

தெரியலை. என் கூட படிச்ச பசங்கெல்லாம் என்னை
"நீ வாத்தியாரத்தான் ஆகப்போறனு" சொல்லுவாங்க...
அப்படி என்ன தனித்திறமையை கண்டானுங்களோ..

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

அது வேணாம் விடுங்க..


28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

அலட்சியம், சோம்பல், இன்னும் நிறைய...

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

ஊட்டி தான். குடும்பத்தோடு போய் ஒருவாரம் ஆசைதீர தங்கிட்டு வரனும்.

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

என்னை சுற்றி இருப்பவர்கள் அனைவரையும் என்னால் முடிந்தளவு சந்தோசமாய்
வைத்துக்கொள்ளவே ஆசை.

31. மனைவி/கணவன் இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம்?

ஓடுமீன் ஓட உறுமீன் வரும்வரை வாடி இருக்குமாம்
கொக்கு..
உறுமீன் வரட்டும், வந்ததும் சொல்கிறேன்.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழ்க்கை என்னங்க வாழ்க்கை.
"ஓராயிரம் கற்பனைகளும்
ஒன்றிரண்டு நிஜங்களும்"

என்னைத்தொடர்ந்து நான் உரிமையோடு வம்புக்கு பிடித்து இழுக்கும் கைகள்

நட்புடன் ஜமால் மற்றும் சுரேஷ்.

செய்தியோடை...