
தென்னிந்தியத் திரைப்படங்களில் இசையமைப்பாளராகவும, இசை நடத்துனராகவும் பணியாற்றியவர் ஆர்.கே.சேகர். இவரது மகனாக 1967ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி பிறந்தார் ஏ.எஸ்.திலீப் குமார். இவர்தான் இன்றைய ஏ.ஆர்.ரஹ்மான்.
இந்த நிலையில் மணிரத்தினம் உருவில் ரஹ்மானுக்கு திடீர் திருப்பம் ஏற்பட்டது. தனது ரோஜா படத்துக்கு இசை மற்றும் பின்னணி இசை அமைத்துத் தர வேண்டும் என்று கேட்டார் மணிரத்தினம்.
சந்தோஷத்துடன் ஒத்துக் கொண்ட ரஹ்மான், தனது திறமைகளை அப்படியே அதில் கொட்டினார். ரோஜா ஏற்படுத்திய இசை பாதிப்பை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. முதல் படத்திலேயே இந்தியா முழுவதையும் தன் பக்கம் ஈர்த்த பெருமைக்குரியவர் ரஹ்மான்.
அதன் பிறகு ரஹ்மானின் இசைப் பயணம் புயல் வேகத்தில் இருந்தது.
அதிக அளவிலான தேசிய விருதுகளைப் பெற்ற ஒரே இசையமைப்பாளர் இன்றைய தேதிக்கு ரஹ்மான் மட்டுமே.
ஆஸ்கர் விருது:
81வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் தொடங்கியது.
இதில், ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான (ஒரிஜினல் ஸ்கோர்) ஆஸ்கர் விருது மற்றும் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது ('ஜெய் ஹோ') வழங்கப்பட்டது.
விருதைப் பெற்ற பின் ரஹமான் பேசுகையில்,
நான் இங்கு வருவதற்கு முன் மிகுந்த அச்சத்துடனும் பெரும் மகிழ்ச்சியுடனும் இருந்தேன். ஏதோ திருமணத்துக்கு வருவது போல இருந்தது. இந்த விருதுக்குக் காரணம் என் தாயின் ஆசிர்வாதம். அவருக்கும் விருது வழங்கிய அகாடெமிக்கும் என் நன்றிகள்.
எனது இசைக் கலைஞர்கள், இந்தப் படத்தில் பணியாற்றியவர்கள் அனைவருக்கும் நன்றி. என் வாழ்நாள் முழுவதும் எனக்கு அன்பு செலுத்தவும், பகைத்துக் கொள்ளவும் வாய்ப்புகள் கிடைத்தன். நான் அன்பையே தேர்வு செய்தேன். கடவுள் நம்மோடு இருக்கையில் நமக்கு எல்லாம் கிடைக்கும்.
இந்த விருதை என் தாயகமான இந்தியாவுக்கு அர்ப்பணிக்கிறேன் என்ற ரஹ்மான்,
''எல்லாப் புகழும் இறைவனுக்கே'' என்று தமிழில் உணர்ச்சிப்பூர்வமாய் மேடையில் பேசி தனது தமிழ் பற்றையும் காட்டினார்.