Monday, November 9, 2009

தோசை



கை நிறைய காசிருந்தும்

நாக்கு ருசிக்கலையே...

நம்ம ஊரு சாப்பாட்டை

தின்னு பல நாளாச்சு…

நானும் சமைக்குறேன்னு

உலைக்கு அரிசி போட்டு

வேகும்வரை காத்திருந்து

கையில் சூடுபட்டு

வேகாம இறக்கிவச்சி

வெங்காயம் வெட்டுறப்ப

அடிக்கடி வருது அம்மா ஞாபகம்!!

கண்ணீரும் கொட்டுது...

ஆசையா அம்மா செஞ்ச தோசையையும்

தங்கச்சி செஞ்ச சட்னியும்

சரியில்லைனு தட்டோடு தூக்கி எறிஞ்ச பாவம்...

சும்மாவா போகும்???


.

Friday, September 4, 2009

பள்ளிக்கூட வாத்தியார்கள்...


நான் பெரிதும் மதிக்கும் ஆசிரியர்களை சிலரை
இன்நன்னாளில் நினைத்துப்பார்க்கிறேன்.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை திருத்துறைப்பூண்டி
புனித தெரசாள் தொடக்கப்பள்ளியில் படித்தபோது
எனக்கு பயிற்றுவித்த ஆசிரியர்கள் ஒருசிலரே இன்று
என் நினைவில் இருக்கின்றனர்.
கணக்கு பாடம் எடுத்த பத்மாவதி (மிஸ்) டீச்சர்,
அறிவியல் சொல்லிக்கொடுத்த சுகந்தி டீச்சர்,
பனிமலர் டீச்சர், செல்வி டீச்சர், ஹிந்தி மிஸ் அருள்....
தலைமையாசிரியை சிஸ்டர் மேரி..

பள்ளிக்கு அழைத்துசெல்லும் வேன் எங்கள் வீட்டு
தெருமுனையில் வந்து திரும்பும் சத்தம் கேட்டாலே
எனக்கு அலர்ஜி..
இன்றைக்காவது வேன் வரக்கூடாது என்ற என் வேண்டுதல்
தினமும் பொய்யாகி போகும்.

பிறகு ஆறு முதல் பணிரெண்டாம் வகுப்பு வரை
மன்னார்குடி பின்லே மேல்நிலைப்பள்ளியில்....
இங்கு நான் கற்றுக்கொண்டது ஏராளம்...
பின்லே என்ற ஆங்கிலேயர் தன்னுடைய
கப்பலை விற்று கட்டிய பள்ளி
என்பது வரலாறு..

திரு.ரெல்டன் M ஜேம்ஸ்:
நான் இன்றளவும் ஆச்சர்யமாய் பார்க்கும் ஒரு மாமனிதர்.
150 வருடம் பழமையான அதே பள்ளியில் மாணவனாய்,
ஆசிரியராய், பின்பு தலைமையாசிரியராக உயர்ந்தவர்.
அவரது தந்தையும் அதே பள்ளியின் பழைய மாணவர்.
அவர் நடையில், உடையில், பார்வையில், பேச்சில் என
எல்லாவற்றிலும் ஒரு கம்பீரம், மிடுக்கு...
பள்ளி விழாக்களில் அவர் மைக்கை பிடித்து பேசினார்
என்றால் கூட்டமே மெய்மறந்து கிடக்கும்.
வசிகரமான பேச்சாளர். கண்டிப்புக்கு பெயர் போனவர்..
பாராட்டவும் அவருக்கு நிகர் அவர்தான்...
அவர் கையால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில்
கணிதத்தில் பள்ளியின் முதல் மாணவன் என்ற
பரிசு பெற்றது என்னுடைய பெரும்பேறு..
அவர் தூரத்தில் மாடிப்படிகளில் ஏறும்போதே
வகுப்பில் இருக்கும் எங்களுக்கு தெரிந்துவிடும்
அவர்தான் வருகிறார் என்று அத்தகைய நடை...
தற்போது அவரது மகனும் அப்பள்ளியின் மாணவர்.

திரு.ராம் ஸ்டாலின்:
என் பள்ளி வாழ்க்கையை செம்மைபடுத்தியதில்
இவருடைய பங்கு மிக அதிகம்.
என்னை கவர்ந்த, நான் பெரிதும் மதிக்கும் ஆசிரியர்களில்
முதலிடம் இவருக்குதான்.
ஒருவிதமான பயம் கலந்த மரியாதை அவர்மீது எனக்குண்டு.
நான் சோர்ந்தபோதெல்லாம் என்னை ஊக்கப்படுத்தியவர்,
நான் பெற்ற வெற்றிகளுக்கு பெரிதும் உவகையுற்றவர்.
வாழ்வில் மிக உயர்ந்த இடத்தை அடைந்த பிறகே
அவரை திரும்பவும் சந்திக்கும் எண்ணத்தில் இருக்கிறேன்.
கூடிய விரைவில் அந்த நாள் வரும்.
TO OBEY IS BETTER THAN SACRIFICE.

திரு.ஜான் சாம்:
எனக்கு பத்தாம் வகுப்பில் ஆங்கில பாடம் எடுத்த ஆசான்
மனதில் பட்டதை வெள்ளந்தியாய் பேசும் நாகர்கோயில்காரர்.
ஒருவரை கூட ஒருபோதும் அடித்ததில்லை.. அதட்டி பேசியதில்லை.
ஆனாலும் அவர் வகுப்பு மிக அமைதியாக இருக்கும்.
சிரிக்க சிரிக்க பாடம் நடத்தும் பாசக்காரர்.
அவர் பாடம் நடத்தியதை விட கதை சொல்லிய நாட்களே அதிகம்.



திரு.அன்பழகன்:
கல்லூரியின் முதல் நாள், முதல் வகுப்பு, எல்லோரும் புதிய முகங்கள்.
அவர் வருகிறார். கூட்டமே எழுந்து நின்று வணக்கம் சொல்கிறது.
அவர் சாக்பீசை எடுத்துக்கொண்டு மேடையேறுகிறார்.
"CAYLEY HAMILTON LAW" என்று ஆரம்பித்தவர்
அந்த ஒரு மணிநேரமும் புயல்வேகத்தில் பாடம்.
வேகம், வேகம் அத்தனை வேகம்.
மணி ஒலித்த பிறகுதான் நிறுத்தினார்.
அன்று மட்டுமல்ல அவரது கடைசி வகுப்பு வரை அப்படிதான்.
எங்களுக்கு கணக்கு பாடம் எடுத்த கணித மேதை திரு.அன்பழகன்
அவர்களை நன்றியோடு நினைத்து பார்க்கிறேன்.

திரு. P.K.செந்தில்குமார்:
CONTROL SYSTEM-ம், PROCESS CONTROL-ம் சொல்லிக்கொடுத்தவர்.
DEADBEAT & DHALINS ALGORITHM-ம் எங்கள் மக்குமண்டையில்
ஏறியதும் இவர் புண்ணியத்தில் தான்..
என்னதான் வாய் வலிக்க திட்டினாலும் INTERNAL MARKS
குறைக்காமல் போடும் குணக்குன்று.
நீங்கெல்லாம் எங்க உருப்படபோறீங்க? என்று எப்பொழுதும்
ஒரு ஏளனப்பார்வை எங்கள் மீது..
சார் நாங்கெல்லாம் இப்போ உருப்பட்டுட்டோம் சார்..

தீபா மேடம்:
எலெக்ட்ரானிக்ஸ் என்றாலே டீ.வியும், D.V.D-யும் தான் என்று
நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் ZENER DIODE-டையும்,
MOS-FET-டையும் அறிமுகப்படுத்தியவர்.
யாராவது ஒருவர் புரியவில்லை என்று சொன்னாலும் சிறிதும்
தளராமல் திரும்பவும் சொல்லித்தரும் விதம் எங்கள் நினைவை
விட்டு இன்றும் அகலவில்லை.

ஸ்ரீவித்யா மேடம்:
CIRCUIT ANALYSIS சொல்லித்தந்த ஸ்ரீவித்யா மேடம்.
நாங்களும் காலேஜ்-ல படிக்கிறோம்-ல என்ற திமிரில் நாங்கள்
அற்பமாய் செய்த பல தவறுகளை சுட்டிக்காட்டி எங்களைத் திருத்தி
அவற்றை H.O.D-க்கு கூட தெரியாமல் மறைத்த புண்ணியவதி.

மகேஸ்வரி மேடம்:
எங்கள் வகுப்புக்கு நாலாறு மாதம் நெறியாளராய் இருந்து
வழிநடத்தியவர்.
DIGITAL ELECTRONICS,
MICROPROCESSOR
போன்ற சிலிக்கான் சிக்கல்களை எங்களின் சிறுமூளையில்
பதியவைத்த பெருமை இவரையே சாரும்.
அடிக்கடி கோபப்பட்டாலும் எதற்காகவும் எங்களை யாரிடமும்
விட்டுக்கொடுக்காதவர். இன்று எங்களில் சிலர் பட்டம் பெற்று
ஒரு பொறியாளராய் வெளிவந்திருப்பது இவரது உதவியால் தான்
என்பது ஒருசிலர் மட்டுமே அறிந்த இரகசியம்.


எத்தனையே ஆசிரியர்கள் எனக்கு பயிற்றுவித்திருந்தாலும்
மிகச்சிலரே என் நெஞ்சில் நிறைந்திருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் மிகவும் கசப்பாக தெரிந்தவர்கள்
இன்று இனிக்கிறார்கள்.


.

Tuesday, July 28, 2009

Sorry friends, i need a short break!





சீக்கிரம் திரும்பி வருகிறேன்...

Sunday, July 12, 2009

வேண்டும் சென்னைக்கும் ஒரு பால்தாக்கரே!


எண்ணெய் முதலைகளின்
பண்ணையில் அடைத்து
பலரைக் கொன்றும்
கொடும்பசி தீராமல்
கோரப் பற்களில் எச்சில் ஒழுக
புன்னகைக்கிறான்...

கையில் பாஸ்போர்ட்டும்
கழனி விற்ற காசுமாய்
நிற்கும் தமிழனை பார்த்து
சென்னையில் கடைவிரித்த
கொல்லத்துக்காரன்...

முற்றுப்புள்ளி இல்லாத இந்த
ஒற்றை வரியில்
குருரமாய் புன்னகைக்கும் இவனை போன்ற பலரை
விரட்டியடிக்க சென்னையின் "பால்தாக்கரே" எவரும் இல்லையா?

நிமிடத்திற்கு 15 ரூபாய் செலவானாலும் பரவாயில்லை...
இங்கிருப்பவர்களிடம் போனில் நன்றாக விசாரித்துவிட்டு வாருங்கள்
இளைஞர்களே!

சமிபத்தில் நான் சந்தித்த நம்ம ஊர் இளைஞன் ஒருவரின்
சோககதையால் எழுதிய பதிவு.
அவர் இங்கு வந்து 3 மாதங்கள் ஆகிறது.
அவரோடு சேர்ந்து இன்னும் சிலரும் வந்திருக்கிறார்கள்..
பெரிய கம்பெனி என்ற போர்வையில் அழைத்துவரப்பட்ட
அவர்களுக்கு வந்தபின் தான் தெரிந்தது அது
ஒன்றுக்கும் உதவாத உப்புமா கம்பெனி..
இதுவரை சம்பளம் தரவில்லை..
சாப்பாட்டுக்கு கூட சிரமம்.
வாரத்திற்கு ஒரு இண்டர்வியுவிற்கு அனுப்புவார்கள்.
அங்கும் இவர்களைப் போல் பலரும் வந்து நிற்க
இதுவரை வேலையில்லை.
எங்களால் முயன்ற உதவிகளை செய்தோம்..

இதில் என்ன கொடுமை என்னவென்றால் அந்த இளைஞர்
தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் படித்த
மெக்கானிக்கல் இஞ்சினியர்.
2 வருடம் மத்தியபிரதேசத்தில் பணிபுரிந்தவர்.
கம்பெனியின் இணையதளத்தை கண்டு ஏமாந்து விட்டதாக
புலம்ப மட்டுமே முடிகிறது அவரால்.

நாகரிகம் கருதி சில விசயங்களை வெளியிடவில்லை.
இங்கிருந்து வெளியேறவும் விசா வேண்டும்
என்பது பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
பலத்த யோசனைக்கு பிறகே இதனை பதிவிட்டேன்

என்னை சுற்றியும் நம் அண்டை மாநிலத்தவரின்
ஆதிக்கம் அதிகமுண்டு.


.

Wednesday, July 8, 2009

நீயில்லாத நெடுந்தொலைவில்...



உன் அடர்கூந்தலில்
முகம்புதைத்து அழுதழுதே
அழுக்காகி போகிறது...
நான் விண்ணேறுகையில்
என்னோடு வந்த உன் புகைப்படம்.


நீயில்லாத இந்நெடுந்தொலைவில்
உன்னை நினையாத நிமிடங்கள்
ஏதுமில்லை என்னிடம்.


ஓடும் பேருந்தில்,
நமக்கான இறுதி சந்திப்பில்,
உன்கை பிடித்து
உயிர் வலிக்க விடைபெற்று
ஓய்ந்துபோன அந்த
கணப்பொழுதின் உஷ்ணத்தை தவிர...

இவன்,

உன் கூந்தலில் தொலைந்துபோன...


நன்றி விகடன்


.

Sunday, June 21, 2009

என்னை மன்னிப்பீர்களா அப்பா?


ஊரும் உறவும் உங்களை சுற்றி
I.C.U வில் நீங்களும்...
பல்லாயிரம் மைலுக்கு அப்பால் நானும்
செயலற்ற நிலையில்...

இந்த வாராத மகனை மன்னிப்பீர்களா அப்பா?

சிறு நெருஞ்சிமுள் குத்தினாலே
தாங்க முடியாத நீங்கள்
எப்படியப்பா துணிந்தீர்கள்?
ஐந்து மணி நேரம்
நெஞ்சை கிழித்து இதயத்தை காட்ட...

இந்த பத்து நாட்களில் என்னவெல்லாம்
நினைத்திருப்பீர்கள்?

அறிவியல் படித்த அகந்தையில்
இறைவனின் இருப்பையே மறுத்த எனக்கு
தெய்வமாய் தெரிகிறார்கள்
உங்கள் உயிர்காத்த மருத்துவர்கள்...

ஒருவேளை சிறுவயதில்
விளையாட்டாய் சொல்வது போல்
நான் "தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை" தானோ?
பாசமற்று பரதேசத்தில் கிடக்கிறேனே இன்று...

தலையில் தண்ணீரை அள்ளி அள்ளி
ஊற்றிக்கொள்கிறேன்...
ஆனாலும் நெஞ்சு கணக்கிறது...

எனக்கும் சொல்லுங்களேன்...
நெஞ்சில் சுமக்கும் ரணங்களை
நீரால் கழுவும் வித்தை
தெரிந்தவர் எவரேனும்?

.....

Thursday, June 18, 2009

தாவணியில் வந்த ஒரு நந்தவனமா?


கடந்த இரண்டு வாரங்களில்
மனசுக்குள்ள பல கவலைகள் இருந்தாலும்
அதையெல்லாம் தூக்கி ஒரு ஓரமா வச்சிட்டு
நம்ம கூடப் படிச்ச பயலுக்கு கல்யாணம்
நடக்கப் போறத நினைச்சா
ரொம்ப சந்தோசமா இருக்கு.

இராமச்சந்திரன்.

எங்க செட்டு பசங்களிலே இவன்தான்
முதலில் கல்யாணம் பண்ணப்போறான்.

நாங்கெல்லாம்
கல்லூரியில் சேரும் போது
Electronic circuits-ல
ஒரு மண்ணும் தெரியாது.

Bread board-லாம் என்னவென்று
எங்களுக்கு மூன்றாம் செமஸ்டர்
circuit lab பண்றப்ப தான் தெரியும்.
அதுவரைக்கும் நாங்க அது ஏதோ
பேக்கிரி ஐட்டம்னு நினைச்சிட்டு
இருந்தோம்.

ஆனா இவன் மட்டும் திருச்சி SIT ல
Diplamo in Instrumentation
முடிச்சிட்டு வந்த திமிர்ல
எல்லாமே தெரியும்னு
தெனாவட்டா உட்கார்ந்திருப்பான்.

சிலசமயம் எங்க வாத்தியாருக்கே
எதாவது சந்தேகம் வந்தா
இவன்தான் தீர்த்து வைப்பான்.

ஆளு வளரலைன்னாலும்
அறிவு வளர்ச்சி கொஞ்சம் ஜாஸ்தி.

நான் சௌதி வந்து சரியா ஆறு மாதம்
கழித்து அவனும் இங்க
வந்துட்டான்.
எனக்கும் அவனுக்கும் வெறும்
150 கி.மி தூரம் தான் இடைவெளி.

அவன் இங்க இருந்த ஒரு வருடக்காலமும்
சௌதியின் பல பகுதிகளுக்கு பறந்துட்டே
இருப்பான். ஏன்னா அவனோட வேலை அப்படி.
யான்பு, ஜித்தாஹ்,சொய்ஃபா,
ரியாத், கடைசியா அல்-ஜூபைல்.


விடிஞ்சா அவனுக்கு கல்யாணம்.

பொண்ணு போட்டோ-வ மெயில்
பண்ணச் சொன்னா, இதோ அனுப்புறேன்னு
சொல்லிட்டு கடைசிவரை
கண்ணுல காட்டவே இல்லை.

விடுவோமா நாங்க???

இரண்டு வாரங்களுக்கு முன்பு அவனை
வழியனுப்ப ஜுபைல் போயிருந்தேன்.

என் கல்லூரி நண்பர்கள்
ஆணந்த், ரஹிம், அஸ்பாக்
போன்றோரை சந்திக்கும்
வாய்ப்பும் கிட்டியது.

அவன் கொஞ்சம் அசந்த நேரமா
பார்த்து அவனோட லேப்டாப்-ஐ
பிரிச்சு மேஞ்சி தேடு-தேடுன்னு தேடி
ஒருவழியா C: -ல
ஒளிச்சு வச்சிருந்த பெண்ணோட
போட்டோ-வ பார்த்த எங்களுக்கு
பயங்கர ஷாக்!!!

பொண்ணு
ஸ்கூல் பிள்ளை மாதிரி இருக்கு.

அப்புறந்தான் சொல்றான்.
அது அந்த பொண்ணு பத்தாம் வகுப்பு
படிக்கும் போது எடுத்ததாம்.

இந்த போட்டோ-வ மட்டும் பார்த்துட்டு
ஓகே சொல்லிட்டியா?
அவன் பதில் சொல்லவே இல்லை.

பாவம் அவன் என்ன பண்ணுவான்?

முன்னெல்லாம் வகைவகையா
பார்த்ததால GOOD, BETTER, BEST-னு
தேடிட்டு இருப்போம்.

இப்போதெல்லாம் நம்ம ஊரு பொண்ணுங்க
யாரைப்பார்த்தாலும் அழகாத்தான் தெரியுறாங்க.

சமைக்கத் தெரியுமா டா?
அதற்கும் அவனிடம் பதில் இல்லை.

நமக்கும் இதே கதி தானா?

என் வாழ்க்கை துணையைப் பற்றி
பெரிதாக எதிர்பார்ப்பு இருந்தாலும்
சமையலை பொறுத்தவரை
மிக மெல்லிசாக தோசை சுடுவதற்கும்,
நல்ல சுவையான "டீ" போடத் தெரிந்திருந்தாலே
போதும்.
கண்டேன் என் சீதையை.

பொண்ணு அவனுக்கு நல்லா
பொருத்தமான ஜோடியா தான் இருந்திச்சு.
மாப்பிள்ளை இப்போ இந்தியா போயிட்டாரு.

சௌதி மாப்பிள்ளை கிடைக்க அந்த பெண்
மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

(எதிர்காலத்தில் எனக்கும் உதவும் என்பதால்
இக்கருத்தினை இங்கு பதிவு செய்ய
வேண்டிய நிர்பந்தம்)

இல்லையா பின்னே?

குடும்பத்தோட வண்டி கட்டிக்கிட்டு
பெண் பார்க்க போறோம்னு போய்
பஜ்ஜி சொஜ்ஜியெல்லாம் சாப்பிட்டுவிட்டு
பொண்ணுக்கு ஆடத் தெரியுமா?
தண்ணிக்குடம் தூக்கத் தெரியுமா? -னு
ஆயிரம் கேள்வி கேட்டு
குடைந்தெடுத்துவிட்டு கடைசியா
வீட்டுக்கு போயி யோசிச்சு பதில்
சொல்றோம்னு Infosys Company
HRD Manager மாதிரி லந்து
பண்ற இந்த காலத்துல,

மெயிலில் வந்த ஒரே ஒரு
போட்டோவை மாத்திரம் பார்த்து
(அதுவும் பத்தாம் வகுப்பு போட்டோ)
ஒகே சொல்லி ஊர் போய்
இறங்கி அடுத்த இருபதாம் நாள் திருமணம்.

வாழ்த்துகள்-டா மச்சான்.

மணமக்கள் இருவரும்
வாழ்வின் எல்லா வளமும் நலமும்
பெற்று பல்லாண்டு வாழ இறைவனை
வேண்டுகிறேன்.


மணமக்கள்:
இராமச்சந்திரன்.
பரமேஸ்வரி.


மணநாள்:
19/JUNE/2009

இடம்:
சூசையப்பர் திருமண மண்டபம்.
இலால்குடி.
திருச்சி.

எல்லாரும் வந்து வாழ்த்திட்டு போங்க...

Wednesday, May 27, 2009

என்னைப்பற்றி நானே (அன்புச்) சங்கிலித் தொடரில்...


இது ஒரு (அன்புச்) சங்கிலித் தொடர்.

நிலாவும் அம்மாவும் தொடங்கி வைத்து,
கை நீட்ட அன்போடு கோர்த்துக்கொண்டவர்களின்
வரிசையில் நானும்.

என் கையை அன்போடு இழுத்து இணைத்தவர்
நண்பர் நவாஸ்.

இதுவரை இணைந்தவர்கள்:

ரவீ
அத்திரி
கடையம் ஆனந்த்
ஹேமா
கார்த்திகைப் பாண்டியன்
குமரை நிலாவன்
சிந்துகா
தேவா
வேத்தியன்
அபு அஃப்ஸர்
அ.மு. செய்யது
தமிழரசி
இராகவன் நைஜீரியா
காயத்ரி
நவாஸ்
பாலா

இதுல நானுமா???


1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

என் முழுப்பெயர் பார்த்தசாரதி. என் தந்தை சூட்டிய பெயர்.
அதனாலே என்னவோ எனக்கு மிக பிடிக்கும்.
பார்த்தா-அர்ச்சுனன்; சாரதி-தேரோட்டி.
பாரத போரில் அர்ச்சுனனுக்கு தேரோட்டிய கிருஷ்ணாவின்
பெயரே பார்த்தசாரதி. கோகுலத்தின் கண்ணனை போன்று
என்னைச் சுற்றி No கோபியர்ஸ் Only அரேபியர்ஸ் மட்டும்.

மேலும் நான் ஹிந்து பத்திரிக்கைக்கு கடிதம் எழுதுபவனுமல்ல..


2. கடைசியாக அழுதது எப்பொழுது?

பதினைந்து மாதத்திற்கு முன்னால், பெட்டியை தூக்கிகொண்டு
சௌதி கிளம்பும்போது அம்மா அழுததால்
என் கண்ணிலும் லேசா..


3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ஓஹோனு இல்லையென்றாலும் ஓரளவுக்கு பரவாயில்ல..
என் இடது பக்க மூளை சிறப்பா செயல்படுறதால
வலது கையால இதுவரைக்கும் ஏதும் எழுதினது இல்ல..
left hand writer,brusher,bowler, etc...
சாப்பிடுறதுக்கு மட்டும் கஷ்டபட்டு ரைட்டுல பழகிட்டேன்.


4. பிடித்த மதிய உணவு என்ன?

அம்மா செய்யும் உருளை கிழங்கு வறுவலும்,
தக்காளி ரசமும்.

இப்போ அதெல்லாம் இல்ல.

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட
நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

என் உள்ளத்து உணர்வின் படியே.
அவர்களின் அணுகுமுறையிலே
தான் இருக்கு என் முடிவு.
எனக்கு நண்பர்கள் அதிகம்...
எதையுமே எதிர்பார்க்காமல் ஓடிவந்து தோள்
கொடுக்கும் என் கல்லூரி கால நட்புகள் தான்
என்னை இன்றளவும் சிலிர்க்க வைக்கிறது.

6. கடலில் குளிக்க பிடிக்குமா, அருவியில் குளிக்க பிடிக்குமா?

இரண்டுமே பிடிக்கும். சுனாமிக்கு பிறகு வேளாங்கண்ணி
கடல் பொலிவிழந்து விட்டது. போன குளிர்காலத்தில்
நண்பர்களோடு சேர்ந்து நடுநடுங்க இராஸ்தனுரா
கடலில் கூட நீந்தினோம்.

எங்கள் வீட்டுக்கு முன்புறம் பெரிய
தாமரைக்குளம் ஒன்று உண்டு.
அதனை ஒட்டிய ஆலமரத்தின் கிளையொன்றிலிருந்து
தலைகுப்பற தண்ணீருக்குள் பாய்வதை இப்போது
நினைத்தாலும் முதுகுதண்டில் ஜிலிரென்றிருக்கிறது.
தரையில் இருந்த நாட்களை விட தண்ணிரில்
மிதந்த நாட்கள் தான் அதிகம்.
காவிரி பாயும் கடைக்கோடியிலிருக்கும்
திருத்துறைப்பூண்டி எனது சொந்த ஊர்..

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முகம் பார்த்துதான்.
அப்படியெல்லாம் முதல் பார்வையிலே
யாரையும் எடைபோடும் திறமை எனக்கில்லை.


8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடிச்ச விஷயம்:

எதையுமே மிக எளிதாக எடுத்துக்கொள்ளும் மனப்பாங்கு.
நம்மள மீறி என்ன நடந்திட போகுதுங்கிற தெனாவட்டுனு
கூட சொல்லலாம்.

பிடிக்காத விஷயம்:

தொப்பைய குறைக்க ஜிம்முக்கு போகலாம்னு
நாலு மாசத்துக்கு முன்னாடியே பிளான் பண்ணியும்
இன்று வேண்டாம்,நாளைக்கு நிச்சயம் போகலாமென்ற
(நாசமாப் போன) என் நம்பிக்கைதான்.

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

இந்த கேள்விக்கு பதில் சொல்ல ஆசையாத்தான் இருக்கு.
ஆனா என்ன செய்ய.


10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

என் தங்கையோட குட்டி பையன் ஆதிஷ்,
பிறந்து ஒரு வயசாகியும் இன்னும் நேர்ல பார்க்கலை.
போட்டோஸ்ல மட்டும்தான்..
சீக்கிரம் போய் பார்க்கனும்.


11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

வெள்ளை சர்ட், அதுக்கு மேட்சிங்க ஒரு பேண்ட்
கலர் சரியா சொல்லத் தெரியல.

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?

ISAIARUVI.COM-ல "ஒரு கல் ஒரு கண்ணாடினு" யுவன் பாடிட்டு இருக்கிறார்.

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

வெளிர் நீல நிறம்..

14. பிடித்த மணம்?

வேறென்ன என் திருமணம் தான்.

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

நட்புடன் ஜமால்: பின்னூட்ட புயல். இவரின் "இரவிலும் உதிக்கும் வானவில்"
படித்ததால் ஏற்பட்ட பாதிப்பு. இவர் பதிவில் உள்ள படங்களும் கவி பேசும்.
தரமான பின்னூட்டங்களின் சொந்தக்காரர். பெரும்பாலன பதிவர்களின்
பதிவை முதலில் சுவைப்பது இவர்தான்.

ஷர்வினா-வின் அப்பா: இவர பத்தி நான் சொல்லி தெரிய வேண்டியதில்ல.
24 மணி நேரமும் இணையத்திலே இருப்பாரு.
ஒரு நாளைக்கு ஒரு பதிவு கூட போடலைனா மண்டையே
வெடிச்சிடும் இவருக்கு.
பல வம்பு வழக்குகளில wanted-அ ஆஜராவாரு.
நல்ல பல பதிவுகளை தருபவர்.

குறிப்பு:
மேற்கண்ட இருவரும் பிரபல பதிவர்கள் என்பதால்
இதை தொடர்வார்களா என்று சிறிய சந்தேகம்.

தொடர மறுத்தாலும் சரியானவர்களையே
அழைத்த மனத்திருப்தியே எனக்கு போதும்.


16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு?

நவாஸ்:என்னை போலவே வளைகுடாவில்
வாடும் ஒரு ஜீவன். குறுகிய கால பழக்கமே
என்றாலும் இவர் என்னிடம் எடுத்துக்கொண்ட
உரிமை நெஞ்சை நெகிழச் செய்கிறது.
"இதுதான் gulf"-னு இவரேட பதிவுல,
எங்களோட வாழ்க்கை முறையை
ரத்தினச்சுருக்கமா சொல்லியிருக்காரு..
இன்னும் பல பதிவுகள் இவரை பற்றிய
மதிப்பை பன்மடங்கு உயர்த்தியிருக்கிறது....
இதுவரைக்கும் பேசுனதில்ல..
நவாஸ் தொலைபேசி எண்ணை எனக்கு தருவீங்களா?


17. பிடித்த விளையாட்டு?

ஒருகாலத்துல கிரிக்கெட்,
இப்போ ரொம்ப யோசிக்க வேண்டியிருக்கு.

18. கண்ணாடி அணிபவரா?

ம்ஹும்.

19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

கமல் படமெல்லாம் பிடிக்கும்.
இப்படித்தான்னு ஒரு வரைமுறை இல்லை.

20. கடைசியாகப் பார்த்த படம்?

"INSIDE" னு ஒரு FRENCH படம், குருரத்தின் உச்சக்கட்டம்..
தனியா யாரும் பார்க்காதீங்க...
பார்க்கனுமா???

21. பிடித்த பருவ காலம் எது?

டிசம்பரின் முடிவும், ஜனவரியின் ஆரம்பமும்..

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

தற்போதைக்கு ஒன்னும் இல்ல.
கடலை மடிச்சு தந்த பேப்பரக்கூட ஒருவரி விடாம
வாசிச்சு வளர்ந்தவன்..
காலம் மாறிப்போச்சு.

23. உங்கள் டெஸ்க்டாப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

அரைமணிக்கொரு தடவை அதுவா மாறிக்கிட்டே இருக்கும்.
உபயம்: jhon's Background Switcher மென்பொருள்...

24. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம்:
OFFSHORE PROJECT-ல இருக்குறதுனால தினமும்
ஒரு மணி நேரம் BOAT-ல பயணம்.
அந்த BOAT சத்தத்துல லைப் ஜாக்கெட்ட மாட்டிக்கிட்டு
தூங்குறது தனி சுகம்.

பிடிக்காத சத்தம்:
அந்த நேரத்திலயும் காதுக்குள்
கத்தும் பிலிப்பைனியர்கள்.
கொடுமை...

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

சௌதி வந்தது தான் அதிகபட்சம்..

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

தெரியலை. என் கூட படிச்ச பசங்கெல்லாம் என்னை
"நீ வாத்தியாரத்தான் ஆகப்போறனு" சொல்லுவாங்க...
அப்படி என்ன தனித்திறமையை கண்டானுங்களோ..

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

அது வேணாம் விடுங்க..


28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

அலட்சியம், சோம்பல், இன்னும் நிறைய...

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

ஊட்டி தான். குடும்பத்தோடு போய் ஒருவாரம் ஆசைதீர தங்கிட்டு வரனும்.

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

என்னை சுற்றி இருப்பவர்கள் அனைவரையும் என்னால் முடிந்தளவு சந்தோசமாய்
வைத்துக்கொள்ளவே ஆசை.

31. மனைவி/கணவன் இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம்?

ஓடுமீன் ஓட உறுமீன் வரும்வரை வாடி இருக்குமாம்
கொக்கு..
உறுமீன் வரட்டும், வந்ததும் சொல்கிறேன்.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழ்க்கை என்னங்க வாழ்க்கை.
"ஓராயிரம் கற்பனைகளும்
ஒன்றிரண்டு நிஜங்களும்"

என்னைத்தொடர்ந்து நான் உரிமையோடு வம்புக்கு பிடித்து இழுக்கும் கைகள்

நட்புடன் ஜமால் மற்றும் சுரேஷ்.

Thursday, May 14, 2009

வருஷம் ரெண்டே முக்கால் லட்சம் சம்பளம்...



நான் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் போது என் வீட்டுக்கு வந்த என் நண்பர்களில் ஒரு சிலரை என் உறவினர்களிடம் அறிமுகப்படுத்தும் போது,

“இவங்கெல்லாம் கேம்பஸ் இண்டர்வியூவில் செலக்ட் ஆனவங்க.
வருஷத்துக்கு ரெண்டே முக்கால் லட்சம் சம்பளம் வாங்க போறாங்க”
என்று பெருமை பொங்க சொல்லித் தொலைத்து விட்டேன்..

இது எத்தகைய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பற்றி சிறிதளவும் அப்போது சிந்திக்கவில்லை.

நீங்கெல்லாம் எங்க உருப்பட போறீங்க? என்று கல்லூரி
வாத்தியாரிடம் அடிக்கடி சாபம் வாங்குன பசங்க நாங்க...

பின்னாளில் படிப்பை முடித்துவிட்டு,
எந்த ஒரு மென்பொருள் நிறுவனத்துக்கும் எங்களிடமிருந்த அளவுக்கதிகமான புத்திகூர்மையும் சாதுர்யமும் தேவைப்படாத காரணத்தினால்,
வேலைத்தேடி சென்னை வந்திறங்கிய மூன்றாவது நாளே எனக்கும், சலாவுதினுக்கும் ஒரு வன்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.
(அப்பாடா... தெளிவா சொல்லியாச்சு...)

மாதம் எட்டாயிரம் சம்பளம். சென்னையின் மிக நெரிசலான எக்மோரில் அமைந்திருந்தது அந்த அலுவலகம்...

“சென்னையின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவுக்கு ஆற்றல் மிகுந்த இளம் பொறியாளர்கள்
தேவை” (Young and Energetic Engineers)

ஹிந்து பத்திரிக்கையின் கடைக்கோடியில் வந்த அந்த விளம்பரத்தின் சாராம்சத்தை தான் மேலே நீங்கள் பார்த்தது.. அதன் விளைவே நாங்களிருவரும் அந்நிறுவனத்தில்...


முதல் நாள் மேலாளரை பார்ப்பதற்காக அலுவலகத்தின் வரவேற்பரையில் நெஞ்சு படபடக்க காத்திருக்கிறோம்...

ஒரு செவத்த பெண்ணொருத்தி வரவேற்பறையில் அமர்ந்திருந்தாள். சௌகார்பேட்டையை சேர்ந்தவளாய் இருக்கக்கூடும் என சலா என் காதில் கிசுகிசுத்தான்.

அந்த அலுவலகமே மிக வித்தியாசமாய் இருந்தது. ஏகப்பட்ட இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் வருவதும் போவதுமாய் இருந்தனர். ஒரே கூத்தும் கும்மாளமுமாய் அந்த அலுவலகமே களை கட்டி இருந்தது.


அந்த மேலாளர் ஒரு வட இந்தியக்காரர். நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசினார். ஒருவாரம் கடும் பயிற்சி என்றும், அதில் தேறினால் தான் கனடாவில் உள்ள தலைமையகத்திலிருந்து
பணி நியமன ஆணை வரும் என்று சொன்னார்.

மேலும் உங்கள் ஒவ்வொருவரையும் நம்பி கம்பெனி பல லட்சங்கள் முதலீடு செய்யப்போகிறது என்றும் சொன்னார்...


இறுதியாக அவர் சொன்னது தான் என்னையும் சலாவையும் சங்கடத்தில் ஆழ்த்தியது. “நாளை முதல் அனைவரும் டை அணிந்து வர வேண்டும்” என்று சொன்னது தான்...


எங்களை போன்று இன்னும் சில நல்லவர்களையும் வேலைக்கு தேர்ந்தெடுத்திருந்தனர்..


பிறகு எல்லோருக்கும் தனித்தனியாக ஒரு பயிற்றுனரை நியமித்தார். அகிலா என்ற பெண் தான் எனக்கு பயிற்றுனர் (ட்ரெயினர்). கொஞ்சம் அதட்டினாலே அழுதுவிடும் முகத்தோற்றம்... சொந்த ஊர் கடலூர் என்றும் தான் ஒரு M.B.A பட்டதாரி என தன்னை அறிமுகப்படுத்தி கொண்டாள்.


சலாவுதின் ஆவலோடு எதிர்பார்த்தது எதுவுமே நடக்கவில்லை. அந்த மேனேஜர் மிக விவரமானவன் போல, சலாவுக்கு ஒரு முரட்டுப் பையனை ட்ரெயினராக நியமித்திருந்தான்…


மறுநாள் 40 ருபாய்க்கு பாண்டி பஜாரில் வாங்கிய டையை கட்டிக்கொண்டு 8 மணிக்கெல்லாம் இருவரும் ஆபிசில் ஆஜரானோம்.


ஆண் பெண் என அனைவரும் கூடியிருக்கும் ஒரு ஹாலில் வைத்து அறிமுகப்படலம் முடிந்து சராமாரியாக எங்களை கேள்விகள் கேட்டார்கள்.


பிறகு ஆடியோ பிளேயரில் பாட்டை போட்டு எங்களை டான்ஸ் ஆடச்சொன்னார்கள். எனக்கு அப்போது தான் லேசாக சந்தேகம் வந்தது. இது உண்மையான கம்பெனி தானா?

ஒரு குண்டு பெண் வந்து எவ்வித சங்கோஜமில்லாமல் கட்டிடம் அதிர ஆடிட்டு போனாள். கூட்டமே அவளுடைய ஆட்டத்தை கண்டு ஆர்ப்பரித்தது.


அடுத்து சலாவுதினை ஆடச்சொன்னார்கள். அவனும் நடுவில் போய் நின்று “தாண்டியா ஆட்டம் ஆட” பாட்டுக்கு அமர்க்களமாய் ஆடி அப்ளாசை அள்ளிக்கொண்டான்.

அடுத்தது என்னுடைய முறை.
கைகாலெல்லாம் உதற என்னால் ஆடமுடியாது என வம்படியாய் மறுத்து விட்டேன்.. எவ்வளவோ சொல்லி பார்த்தார்கள்..

வேலையே இல்லையென்றாலும் பரவாயில்லை முடியாது என்ற நிலமைக்கு வந்துவிட்டேன்...


பிறகு என்னை ஒதுக்கிவிட்டு காலை 11 மணி வரை பல விளையாட்டுக்கள். 11 மணிக்கு மேனேஜரும் கூட்டத்தில் சேர்ந்துக்கொண்டான்.. அடுத்த அரைமணி நேரம் ஒரே சொற்பொழிவு.


“TODAY’S OTHER PEOPLE MONEY IS TOMORROW OUR’S MONEY”

“இன்று அடுத்தவனின் பணம், நாளை முதல் நம் பணம்” என கூட்டமே பெருங்குரலெடுத்து அலறியது..


பின்னர் எல்லோரும் ஆளுக்கு ஒரு ஃபைலை எடுத்துக்கொண்டு கூட்டம் கூட்டமாய் வெளியே கிளம்பினார்கள்...


அகிலா என்னை மின்சார ரயிலேற்றி தாம்பரத்தில் வந்திறக்கினாள். ரயிலில் டை அணிந்து வந்த என்னை கூட்டமே வித்தியாசமாய் பார்த்தது.. வழி நெடுக அகிலாவின் டிப்ஸ் மழை வேறு...



தாம்பரத்தில் ஒரு குறிப்பிட்ட ஏரியாவிலிருந்து வீடுவீடாகச் சென்று கதவைத்தட்டி


வீ ஆர் கம்மிங் ஃபிரம் வோடாஃபோன் என்று ஆரம்பித்து நடையாய் நடந்து சிம்கார்டு விக்கிற வேலை என்று தெரிய எனக்கு வெகுநேரம் ஆனது..
வாழ்க்கையே வெறுத்து போனது..


Process Control வாத்தியார் என் மனத்திரையில் வந்து பலமாய் கைதட்டி சிரித்துவிட்டு போனார்...
வாத்தியார் சாபம் பலிச்சுடுமோ..
லேசாக பயம் வந்தது..


மறுநாள் காலை நானும் சலாவும் எட்டு மணிக்கப்புறமும் தூங்கி கொண்டிருக்க என் செல்போன் அழைத்தது.. எடுத்து பார்த்தேன்..
அழைத்தது அகிலாதான்... என்ன சொல்வது என்று தெரியாமல்,
அருகிலிருக்கும் சலாவை உலுக்கி
“டேய் ஆபிசுக்கு கூப்பிடுறாங்கடா”
என்று அவனிடம் கொடுத்தேன்.


அவன் அதை அசால்டாக வாங்கி, அவன் அடிக்கடி சொல்லும் அந்த வார்த்தையை உபயோகித்தான். போங்கடி....................

அதன்பிறகு அவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவே இல்லை...


நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் அது.



இப்போதும்கூட எனக்கு ஏதேனும் பணி சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட்டால் வெறும் எட்டாயிரம் காசுக்காக நானும் அவனும் சென்னை வீதிகளில் சிம்கார்டு விற்றதை நினைத்து என்னை நானே தேற்றிக்கொள்வேன்....


வேலைத்தேடி பற்பல கனவுகளோடு சென்னை வந்திறங்கும்
பலரை வந்தவுடன் வாரியணைத்துக்கொள்வது மார்க்கெட்டிங் துறை தான்...


இன்னும் அந்த கும்பல் எங்களைப் போன்ற பல பேரை தேடிக்கொண்டிருக்கும் அதற்காகவே இந்த பதிவு... இளைஞர்களே விழிப்புடன் இருங்கள்.
அந்த நயவஞ்சக கூட்டம் பற்றி நாளை சொல்கிறேன்...

Sunday, May 10, 2009

அம்மா...



எனக்கு நடக்க கற்று தந்தவள்
நீ...

உன்னை விட்டு வெகுதூரத்தில்
ஓடிக்கொண்டிருக்கிறேன்...
ஏதுமற்ற இலக்கை நோக்கி...

இங்கு கோயில்களே இல்லையென்று
குறையேதும் இல்லை
எனக்கு.

பர்ஸை திறக்கும்போதெல்லாம்
ஆசிர்வதிக்கிறாள்
அம்மா...

Wednesday, May 6, 2009

அட என்னோட பதிவும் விகடன்-ல வந்திருக்கே!!!


மிகவும் சந்தோசமாய் இருக்கிறது...
சிறு வயதிலிருந்து நான் ஆணந்தவிகடனின்
தீவிர வாசகன்...

சுஜாதா, எஸ்.இராமகிருஷ்ணன் போன்ற
எழுத்துலக ஜாம்பவான்களையெல்லாம்
எனக்கு அறிமுகப்படுத்தியது
விகடன் தான்...

அன்று ஆரம்பித்த விகடனுடனான என் தொடர்பு
இன்றும் தொடர்கிறது...


அப்படி நான் சிறுவயது முதல் பார்த்து படித்து
பரவசமடைந்த விகடனின் வலைதளத்தில் இன்று
என்னுடைய படைப்பும்...
அதுவும் முதல் பக்கத்தில்...

நன்றி...
youthful.விகடன்.com

என்னுடைய பதிவை விகடனில்
பார்க்க இங்கே கிளிக்கவும்..

http://youthful.vikatan.com/youth/parthasarathiarticle06052009.asp

Monday, May 4, 2009

பெண்கள் இல்லாத தேசத்தில் யாரும் குடியிருக்க வேண்டாம்..





டைசியாக மும்பை "மாதுங்கா" இரயில்வே ஸ்டேசனில் பளிச்சென்று ஒரு பெண்ணை
வெகுஅருகில் பார்த்ததாக நினைவிருக்கிறது.

அதன்பிறகு கடந்த 450 நாட்களாக எந்த ஒரு பெண்ணின்
முகத்தையும் இதுவரை பார்க்கவே இல்லை.

சற்று யோசித்து பாருங்கள்,வீட்டிலும் உங்களைச் சுற்றி ஆண்கள்,
தெருவில் இறங்கி நடந்தால் அங்கேயும் ஆண்கள்,
பணிபுரியும் அலுவலகத்திலும் அனைவரும் ஆண்கள்,
அதுமட்டுமில்லாது உணவகங்கள், வாகனங்கள்,
ஏன் பூங்காக்கள் உட்பட நாம் போகும் அனைத்து
இடங்களிலும் ஆண்களே நீக்கமற நிறைந்து இருந்தால்
வாழ்க்கை எப்படி இருக்கும்?

அப்படி தான் இருக்கிறது இங்கு எங்கள் வாழ்க்கை...
இது சதையைப் பற்றிய புலம்பல்கள் அல்ல.
மனம் சார்ந்த பிரச்சனைகள் மட்டுமே.

தொலைக்காட்சியும் இணையமும் இன்னபிற இருட்டு வகையறாக்களும்
தான் பெண்களை பார்க்கும் வாய்ப்பை எங்களுக்கு தந்தன.

எங்கள் வசிப்பிடத்தின் அருகில் உள்ள ஷாப்பிங் மால்களில்
எப்போதாவது பர்தா அணியாத ஒருசில அமெரிக்ககாரிகளையும்,
பிரிட்டிஷ்காரிகளையும் பார்த்ததுண்டு.

ஆனால் அவர்கள் பெரும்பாலும் ஒருவிதமான ஆண்தன்மையோடு
பெண்மையின் நளினத்தை தொலைத்தவர்களாகவே இருந்தார்கள்.

இங்கு பெண்களை பார்க்ககூடிய ஒரே இடம்
மருத்துவமனைகள் தான்..

இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மற்றும் கேரளாவை
சேர்ந்த ஏராளமான செவிலித்தாய்கள் பணிபுரிகிறார்கள்.

அவர்களை பார்ப்பதற்காகவே அடிக்கடி நோய்வாய்ப்படும்
நண்பர்களும் சிலர் உண்டு.

தமிழகத்தை சேர்ந்த பெண்கள் யாரும் இங்கே வேலைக்கு
வருவதில்லையாம்.
அதுவும் ஒரு விதத்தில் நல்ல விஷயம் தான்.

உள்ளூர் பெண்களுக்கு மட்டுமே இது பாதுகாப்பான தேசம்.
மற்றவர்களுக்கு????

Simulation-ல் மட்டுமே பார்க்கும் அவர்களை நேரில்
பார்க்கும் நாள் எந்நாளோ?

இப்போதெல்லாம் எங்கள் கனவில் கூட முரட்டு தாடியுடன்
வரும் அரேபியர்களே அதிகம் ஆக்கிரமிக்கிறார்கள்.


அழகு என்ற வார்த்தைக்கே அர்த்தமில்லாத தேசத்தில்

"சாப்பிட்டியா சாரதி?" எனத் தொலைபேசி வழியாக
பரிவோடு கேட்கும் அந்த ஒற்றை பெண்குரல் தான்
என்னை இன்னும் உயிரோடும் உணர்வோடும் வைத்திருக்கிறது.

எனவே மக்களே!
பெண்கள் இல்லாத ஊரில் யாரும் குடியிருக்க வேண்டாம்..

Sunday, March 29, 2009

துபாய்ல மீனு விக்கிற மீரு....

நேற்று துபாயிலிருந்து என் friend மீர் அப்துல் வாஹித் எனக்கு மின்னஞ்சல் அனுப்பி இருந்தான்... சமிபத்தில் எடுத்த புகைப்படங்களையும் அதில் இணைத்திருந்தான்...

சில வருடங்களுக்கு முன்பு Bangalore Yokogawa வில் Distributed Control System ல் பயிற்சி பெற நாங்கள் ஐந்து பேர் Bangalore போயிருந்தோம்..

அப்போ இவன் பண்ற சேட்டை தான் அதுல ஹைலைட்.. நாளை மறுநாள் எந்த ஹோட்டல்ல சாப்பிடனும்னு மூணு நாளைக்கு முன்னாடியே ப்ளான் போட்டிட்டு இருப்பான்....

எங்கெல்லாம் சிப்ஸ்-ம், பப்ஸ்-ம் விக்குறாங்களோ அங்க தான் இவன் நின்னுட்டு இருப்பான்.....

Jubleeனு ஒரு மேடம் தான் எங்களுக்கு அப்போ Trainer... அவங்க கிட்ட டவுட் மேல டவுட் கேட்டே ஒரு கேரளா பெண்ணை மயக்க பார்த்தான்... ஆனா முடியலை...

எங்க CLASS-லயே INTELLIGENT இவன்தான்னு CASH PRIZE கொடுத்து பாராட்டின H.O.D, எங்களோட FAREWELL FUNCTION-ல இவனை கூப்பிட்டு பேச சொன்னாரு..

இவனும் முன்னாடி போய் நின்னு “லட்டு நல்லா இருந்துச்சு... ஆனா மிக்சர் தான் சரியில்ல.... வேற நல்ல கடையில வாங்குயிருக்கலாம்ல...” னு சொல்லிட்டு வந்து சீட்ல உட்கார்ந்துட்டான்...

H.O.D. முகத்தை பார்க்கணுமே... நிச்சயமாய் வருத்தப்பட்டிருப்பார்...
பணம் (வடை) போச்சே!!!


இப்போ துபாய் இராஸ்-அல்-கைமா ல புதுசா கட்டிட்டு இருக்கிற ஒரு சிமெண்ட் ப்ளாண்ட்க்கு Pressure Transmitter-ம், Level Transmitter-ம் Configure பண்ணிட்டு இருக்கான்.,.. (ETA ASCON)

Global Economic Crisis காரணத்தை காட்டி வீட்டுக்கு அனுப்பிடுவாங்களோனு பயந்து Part Time job ல மீனு பிடிக்க போறானாம்...



கல்லுரி இறுதியாண்டு படிக்கும் போது இவன் செய்த ஒரு வில்லங்கத்துக்கு அப்பாவி பத்து பேரை சஸ்பெண்ட் செய்தது கல்லூரி நிர்வாகம்..

அதுக்கு மூலக்காரணம் நானும் அவனும் தான்...

நாங்க ரெண்டு பேரும் தப்பிச்சுட்டோம்...

அது ஒரு பெரிய சோக கதை.. அத அப்பறம் சொல்றேன்..

Friday, March 27, 2009

சும்மா ஒரு விளம்பரம்....


Create Faers with MaPic.com




நண்பர்கள் சேக் ஆலம், மக்ரூப், உடன் சலாவுதீன்........


Create Fk wt Magm




என் கம்பெனி கார்தான்பா.........

Wednesday, March 18, 2009

வெங்கடேஷும் என் SMS ம்......


இன்னக்கி blog ல என்ன post போடலாம்னு யோசிச்சப்ப ஏன் என் நண்பன் எனக்கு செய்த உதவிக்கு அவனுக்கு நன்றி சொல்லக்கூடாதுனு தோணிச்சி...

நம்ம ஊர்ல உள்ள என் நண்பருக்கெல்லாம் இணையத்தின் வாயிலாக குறுந்தகவல் (அதாங்க SMS) அனுப்ப ஒரு நல்ல இணையதளத்தை தேடிக்கொண்டிருந்தேன்.

பல இணையதளங்கள் இருந்தாலும் அதில் இங்கிருந்துகொண்டு பதிவு செய்வதில் சின்ன சிக்கல்..

என்கிட்ட இந்திய மொபைல் இருந்தா தான் பண்ண முடியுமாம்.. அவங்க (பாஸ்வேர்ட்) கடவுசொல்லை அந்த குறிப்பிட்ட மொபைலுக்கு தான் அனுப்புவாங்களாம்..

இங்கிருந்து நான் ஒரு SMS இந்தியாவுக்கு அனுப்பனா அந்த காச வைச்சி இங்கே ரெண்டு லிட்டர் பெட்ரோல் வாங்கலாம்... அப்போ ஒரு கால் பண்ணா????

என்ன பன்றதுன்னு யோசிச்சப்ப என் ஆருயிர் நண்பன் வெங்கடேஷ் Yahoo messenger chat ல வந்தான்.

அவனும் நானும் 3 வருஷம் இஞ்சினியரிங் ஒன்னா படிச்சோம். அவன் LATERAL ENTRY -ல உள்ள வந்த பையன்... அதனால தான் 3 வருஷம்..

Data Structure னு ஒரு பேப்பருக்கு எனக்கு அவன் தான் வாத்தியார். எனக்கும் இன்னும் புரியல என்ன எழவுக்கு அந்த பேப்பர் எங்களுக்குனு.. எல்லாருமே கிறுக்கு பிடிச்ச மாதிரி இருப்போம் அந்த வகுப்புல.

அவன் எனக்கு சில பல வித்தைகள் எல்லாம் சொல்லி கொடுத்து அந்த பேப்பர பாஸ் பண்ண வச்சான்.. தியரி பேப்பர்ல பார்டர் மார்க் வாங்கி பாஸ் பண்ணிட்டேன் அவன் புண்ணியத்தில..

பிராக்டிக்கல்ல 100 க்கு 98 வாங்குனேன். ஆனா சத்தியமா எனக்கு ஒரு மண்ணும் தெரியாது அதுல...

வகுப்புல மிகவும் அமைதியான பையன்.. தல அஜித்துக்கு தீவிரமான ரசிகர், திருச்சி கே.கே நகர் ல மிகப்பெரிய ஆளு..

போதும்னு நெனைக்கிறேன்.....

அப்பேர்பட்ட என் நண்பன் எனக்கு தன்னுடைய மொபைல் மூலமா எனக்கு அந்த வசதியை ஏற்படுத்தி தந்தான். SILENT BUT BRILLIANT...


இப்ப அவன் புண்ணியத்துல எல்லாருக்கும் ஈஸியா SMS அனுப்புறேன்,

நன்றி நண்பா.

Wednesday, March 11, 2009

சேவாக் அடிச்ச செஞ்சுரி


உலக கிரிக்கெட் வரலாற்றின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும், ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு வீரர் தனிச்சிறப்பான ஆட்டத் திறனுடன் தோன்றுவர்.

கிரிக்கெட்டின் எந்த ஒரு விதிகளுக்கும் அடங்காமல் படுபயங்கரமாக எதிரணியினரை கதிகலங்க அடித்து வரும் ஒருவர் சேவாக். இன்று நியுசிலாந்துக்கு எதிராக விரேந்திர சேவாக் ஆடிய ஆட்டம் கிரிக்கெட்டின் மரபான உத்திகள் அனைத்தையும் உடைத்தெறிவதாய் அமைந்து இருக்கிறது.
60 பந்தில் சதமடித்து அசத்தியிருக்கிறார்.
கேப்டன் வெட்டோரி பந்தில் இமாலய சிக்சர் அடித்து தனது 11 வது சதம் கடந்தார்.

முதன் முதலில் அவர் ஆடிய ஆட்டம் பெங்களூரில் ஆஸ்த்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் சர்வதேச போட்டியில். அந்த ஆட்டத்தில் சச்சின் ஏற்கனவே துவக்கத்தில் களமிறங்கி சதம் எடுத்துவிட்டுச் சென்றார்.

ஆனால் பின்னால் களமிறங்கிய சேவாக்கை அப்போது யாருக்கும் அதிகம் தெரியாது. வர்ணனையாளராக இருந்த நவ்ஜோத் சிங் சித்து மட்டும் சேவாக்கை "இன்னொரு டைனமைட் வெடிக்கக் காத்துக் கொண்டிருக்கிறது" என்று வர்ணித்தார்.

சேவாக்கும் அதனை நிரூபிக்கும் விதமாக அன்று 35 பந்துகளில் அரை சதம் எடுத்தார்! அன்று ஆஸ்திரேலிய அணியில் கிளென் மெக்ரா, கில்லஸ்பி போன்ற தலை சிறந்த பந்து வீச்சாளர்கள் கண்களில் பயம் தெரிந்தது.


அப்போது அவர் தன்னை சச்சின் டெண்டுல்கரின் விசிறி என்று கூறியதோடு, ஆட்டத்திலும் அவரது அதிரடி முறையையே பின்பற்றுகிறேன் என்றார்.

இன்று துவக்கத்திலேயே எதிரணியினரின் பந்துகளை துவம்சம் செய்யும் சிம்ம சொப்பனமாக சேவாக் தொடர்ந்து நீடிக்கிறார். இனிமேலும் அப்படித்தான் ஆடப் போகிறார்.

இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் தொடரில் நியூஸீலாந்து அணியை வீழ்த்தினால் மட்டுமே இறுதிப் போட்டிக்குள் நுழைய முடியும் என்ற நிலை ஏற்பட்ட போது 250 ரன்களுக்கும் அதிகமான இலக்கை குறைந்த ஓவர்களில் எடுக்க வேண்டிய கட்டாயத்தில், சேவாக் முதன் முதலாக ஒரு நாள் போட்டிகளில் துவக்க வீரராக களமிறக்கப்பட்டார். அன்று அவர் 69 பந்துகளில் 100 ரன்களை விளாசி அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார். அன்றுதான் இந்தியாவின் புதிய அதிரடி மன்னன் பிறந்ததாக அனைவரும் சேவாக்கை கொண்டாடத் துவங்கினர்.


ஒருமுறை சுழற்பந்து வீச்சாளர் ஸ்டூவ்ர்ட் மெகில்லிடம் போட்டி முடிந்து நிருபர்கள் கேட்டபோது, "நான் தவறாக வீசினேன், சரியாக வீசினேன் என்பதெல்லாம் அல்ல, சேவாக் என்னை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பதுதான் வேடிக்கை" என்றார்.
அன்று அவரை மட்டுமல்ல மற்ற எந்த வீச்சாளர்களையுமே அவர் ஒரு பொருட்டாக மதிக்காமல் மைதானம் முழுக்க சிதற அடித்தார்.


இயன் சாப்பல் ஒரு முறை, "இன்னமும் சிறிது காலத்திற்கு சேவாக்கும், கம்பீரும் இது போன்ற அதிரடி முறையைக் கையாண்டு உலகப் பந்து வீச்சாளர்கள் அனைவரையும் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப் போகிறார்கள், இது இந்திய அணிக்கு பல வெற்றிகளைப் பெற்றுத்தரும்" என்றார்.

இது போன்று பந்து வீச்சாளரின் பெயர்?
அவரது சாதனை?,
அவர் எவ்வளவு வேகம் வீசுகிறார்?
சுழற்பந்து வீச்சாளாயிருந்தால் அவர் எவ்வளவு தூரம் பந்துகளை திருப்புவார்? என்று கிரிக்கெட்டின் அடிப்படைகளை உடைத்தெறிந்து
“பந்து விழும் இடம் அடி” என்று உள் மனது கூறினால் அடிப்பது இதுவே சேவாக்கின் எளிமையான ஆனால் பயங்கரமான உத்தி.



சேவக் குறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் வெட்டோரி,

"சேவக் ஆட்டத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அவரிடம் நாங்கள் தோல்வியடைந்து விட்டோம். அவரை கட்டுப்படுத்த எங்களுக்கு வழி தெரியவில்லை”.

Saturday, March 7, 2009

26 கி.மீ இடைவெளியில் எத்தனை மாற்றம்......

பஹ்ரைன் Vs சௌதி அரேபியா




பஹ்ரைன்...

ஒரு குறும்தீவு இது.சுற்றிலும் கடல்.

நடுவே கண்ணாடி மாளிகைகள் அடுக்கடுக்காய்.

பளீர்சாலைகள்.

இருமருங்கிலும் செயற்கையாய் பச்சை ஆக்கியிருக்கிறார்கள்.

அரபு நாடென்றாலும் ரொம்ப கெடுபிடியில்லை.

அழகிய நங்கைகள் நவ நாகரீக உடைகளில் ஆங்காங்கே உலாவருகிறார்கள்.

சந்தேகித்தால் முழு பயணப்பெட்டியையும் விமானநிலயத்தில் சோதிக்கிறார்கள்.

போதை வஸ்துக்களுக்காக கடுமையான சோதனை.

அப்பப்போ ஏதாவதொரு திருவிழா நடந்துகொண்டேஇருக்கிறது.

பஹ்ரைனில் வாழ்கை கொஞ்சம் ஜாலிதான்.

இங்கிருந்து தரைவழியாகவே போய்விடலாம் சௌதி அரேபியாவுக்கு.

பஹ்ரைன் கடல் தீவிலிருந்து சௌதிஅராபிய நிலப்பரப்புக்கு கடல்மேல் நீண்ட பாலம் அமைத்திருக்கிறார்கள்.

சுமார் 26 கிலோமீட்டர்கள்.

சுற்றிலும் கடலை பார்த்த படியே பயணிக்கலாம். நடுவில் சௌதியில் நுழையும் போது கெடுபிடி ஆரம்பிக்கிறது.

உங்கள் பயணபெட்டிகள் சுத்தமாய் அலசப்படும்.

எதைவேண்டுமானாலும் அவர்கள் குப்பையாய் தூக்கி எறியலாம்.

பெண்கள் முழு பர்தா அணிய துவங்கிவிடுகின்றனர்.

கருப்பாய் முழுநீள அங்கி அவ்ளோதான்.

வாகனங்களெல்லாம் இறக்குமதி செய்யப்பட்ட பழம் பெரும் வாகனங்கள்.
மண்ணும் சேறும் அப்பியிருக்கிறது.

பெரும்பாலான வாகனங்களில் பல பெண்கள் உட்பட குடும்பம் குடும்பமாய் குந்தியிருக்கிறார்கள்.

பாகிஸ்தானியரும்,பங்ளாதேசியர்களும் இந்தியர்களும் அவர்களை ஏறெடுத்துக்கூட பார்ப்பது இல்லை.காரணம் பயம்.

எல்லோருக்கும் சட்டமும்,விதிகளும் நடப்பு நிலவரங்களும் நன்கு தெரிகிறது.
முழு பரிசோதனைக்கு பின் சௌதிக்குள் நுழைகின்றோம்..


"டேய் நீ ரொம்ப குடுத்துவச்சவன்" என என் தோழி சொன்னது ஏனோ என் நினைவுக்கு வந்தது...

நீண்ட பரந்த சாலைகள்.இருபுறமும் குப்பைகள்...

ஓடும் வாகனங்களும் அப்படியே...

அல்கோபார்,தமாம் என்று அந்த பயணம் தொடர்கிறது...

எல்லாமே இரண்டு இரண்டு...

பெண்களுக்கொரு மார்க்கெட்.

ஆண்களுக்கொரு மார்க்கெட் இப்படியாக எல்லாம் இரண்டு.... A.T.M உட்பட...

தனியாக வேலை செய்யும் ஆண்கள் பெரிய மூடப்பட்ட சுற்று சுவர்களுக்குள் வசிக்கிறார்கள்.
ஒவ்வொரு காம்ப்பவுண்டும் ஒரு உலகம்.

அராம்கோ-பெட்ரோல் பெரும்பாலான தொழில்கள் இதை சார்ந்தே இருக்கின்றன.

கடுமையாக உழைக்கும் இந்தியர்களை பார்க்கமுடிகிறது.

சாலைகளில் பெண்களை காண முடிவதில்லை. கண்டாலும்?????

கொஞ்சம் சுதந்திரமாய்(?) இருக்க அப்பப்போ பஹ்ரைன் வந்து செல்கிறார்கள் பல சௌதி குடிமக்கள்...







நம்ம ஊர் ஆட்கள் ஒராண்டோ அல்லது ஈராண்டோ கழித்து விடுமுறையில் இந்தியா போக ஏர்போர்ட் நுழைந்ததும் அவர்கள் சந்தோசம் பார்க்க வேண்டுமே மகிழ்ச்சி தெளிவாய் தெரிகிறது.

ஒருகணம் சிறு பெருமூச்சுவிட்டு இதயம் அடங்குகிறது.

ஒருகாலத்தில் ஆடிய ஆட்டமென்ன இப்போ இது தான் நம் வாழ்கை.

தாவணி பெண்களும்,
மல்லிகை வாசமும் மறந்தே போய்விட்டது...

இப்படித்தான் எழுதியிருக்கிறது.இப்படிதான் நாம்
பயணித்தாகவேண்டும்....

அந்நிய தேசத்தில் அடிமையாய் நான்..

சுற்றலும் மனிதம் அற்றுப்போன மனிதர்கள்..

Monday, March 2, 2009

நாம எல்லாரும் சேர்ந்து துபாய் போகலாமா???



Date Taken:06/02/2007 Time:03:24 P.M

இடம்: M.A.M கல்லூரி கேண்டீன்...


02/march/2009

நாலுப்பேரும் இப்போ துபாய் ல.....
ஷேக் போல படு ஷோக்கா இருக்கானுங்க..

ஊருக்கே பாடம் சொல்லும் வாத்தியார் வீட்டு பிள்ளை.....


இவரு பாடம் நடத்திதான் நாங்க எல்லாரும் பாஸ் ஆனோம்......
வாத்தியாரு பயங்கர ஸ்டிரிக்ட்.........

Sunday, March 1, 2009

எங்கே அந்த கைகள்.......


என் துயர்துடைக்கும் கைகள்
தூரத்தில் இருக்கின்றன....

ஆனாலும் துன்பமில்லை...

என்னை சுற்றி காற்றில் அவள் ஸ்பரிசம்
கடலளவு காண்கிறேன்...

என் நெஞ்சமெல்லாம் அவள் நேசம்!

என் சுவாசத்திலும் அவள் வாசம்!


-சாரதி


Friday, February 27, 2009

என்னுடைய கார்னிச் பயணம்......



''எல்லாப் புகழும் இறைவனுக்கே'': ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசிய ரஹ்மான்



தென்னிந்தியத் திரைப்படங்களில் இசையமைப்பாளராகவும, இசை நடத்துனராகவும் பணியாற்றியவர் ஆர்.கே.சேகர். இவரது மகனாக 1967ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி பிறந்தார் ஏ.எஸ்.திலீப் குமார். இவர்தான் இன்றைய ஏ.ஆர்.ரஹ்மான்.
இந்த நிலையில் மணிரத்தினம் உருவில் ரஹ்மானுக்கு திடீர் திருப்பம் ஏற்பட்டது. தனது ரோஜா படத்துக்கு இசை மற்றும் பின்னணி இசை அமைத்துத் தர வேண்டும் என்று கேட்டார் மணிரத்தினம்.

சந்தோஷத்துடன் ஒத்துக் கொண்ட ரஹ்மான், தனது திறமைகளை அப்படியே அதில் கொட்டினார். ரோஜா ஏற்படுத்திய இசை பாதிப்பை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. முதல் படத்திலேயே இந்தியா முழுவதையும் தன் பக்கம் ஈர்த்த பெருமைக்குரியவர் ரஹ்மான்.
அதன் பிறகு ரஹ்மானின் இசைப் பயணம் புயல் வேகத்தில் இருந்தது.

அதிக அளவிலான தேசிய விருதுகளைப் பெற்ற ஒரே இசையமைப்பாளர் இன்றைய தேதிக்கு ரஹ்மான் மட்டுமே.

ஆஸ்கர் விருது:
81வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் தொடங்கியது.

இதில், ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான (ஒரிஜினல் ஸ்கோர்) ஆஸ்கர் விருது மற்றும் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது ('ஜெய் ஹோ') வழங்கப்பட்டது.

விருதைப் பெற்ற பின் ரஹமான் பேசுகையில்,

நான் இங்கு வருவதற்கு முன் மிகுந்த அச்சத்துடனும் பெரும் மகிழ்ச்சியுடனும் இருந்தேன். ஏதோ திருமணத்துக்கு வருவது போல இருந்தது. இந்த விருதுக்குக் காரணம் என் தாயின் ஆசிர்வாதம். அவருக்கும் விருது வழங்கிய அகாடெமிக்கும் என் நன்றிகள்.

எனது இசைக் கலைஞர்கள், இந்தப் படத்தில் பணியாற்றியவர்கள் அனைவருக்கும் நன்றி. என் வாழ்நாள் முழுவதும் எனக்கு அன்பு செலுத்தவும், பகைத்துக் கொள்ளவும் வாய்ப்புகள் கிடைத்தன். நான் அன்பையே தேர்வு செய்தேன். கடவுள் நம்மோடு இருக்கையில் நமக்கு எல்லாம் கிடைக்கும்.

இந்த விருதை என் தாயகமான இந்தியாவுக்கு அர்ப்பணிக்கிறேன் என்ற ரஹ்மான்,

''எல்லாப் புகழும் இறைவனுக்கே'' என்று தமிழில் உணர்ச்சிப்பூர்வமாய் மேடையில் பேசி தனது தமிழ் பற்றையும் காட்டினார்.

Thursday, February 26, 2009

தோசைக்காக ஏங்கும்,சாரதி

கை நிறைய காசிருந்தும்

நாக்கு ருசிக்கலையே...

நம்ம ஊரு சாப்பாட்டை

தின்னு பல நாளாச்சு…

நானும் சமைக்குறேன்னு

உலைக்கு அரிசி போட்டு

வேகும்வரை காத்திருந்து

கையில் சூடுபட்டு

வேகாம இறக்கிவச்சி

வெங்காயம் வெட்டுறப்ப

அடிக்கடி வருது அம்மா ஞாபகம்!!

கண்ணீரும் கொட்டுது...

ஆசையா அம்மா செஞ்ச தோசையையும்

தங்கச்சி செஞ்ச சட்னியும்

சரியில்லைனு தட்டோடு தூக்கி எறிஞ்ச பாவம்...

சும்மாவா போகும்???


தோசைக்காக ஏங்கும்,


சாரதி.


செய்தியோடை...