Wednesday, May 27, 2009

என்னைப்பற்றி நானே (அன்புச்) சங்கிலித் தொடரில்...


இது ஒரு (அன்புச்) சங்கிலித் தொடர்.

நிலாவும் அம்மாவும் தொடங்கி வைத்து,
கை நீட்ட அன்போடு கோர்த்துக்கொண்டவர்களின்
வரிசையில் நானும்.

என் கையை அன்போடு இழுத்து இணைத்தவர்
நண்பர் நவாஸ்.

இதுவரை இணைந்தவர்கள்:

ரவீ
அத்திரி
கடையம் ஆனந்த்
ஹேமா
கார்த்திகைப் பாண்டியன்
குமரை நிலாவன்
சிந்துகா
தேவா
வேத்தியன்
அபு அஃப்ஸர்
அ.மு. செய்யது
தமிழரசி
இராகவன் நைஜீரியா
காயத்ரி
நவாஸ்
பாலா

இதுல நானுமா???


1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

என் முழுப்பெயர் பார்த்தசாரதி. என் தந்தை சூட்டிய பெயர்.
அதனாலே என்னவோ எனக்கு மிக பிடிக்கும்.
பார்த்தா-அர்ச்சுனன்; சாரதி-தேரோட்டி.
பாரத போரில் அர்ச்சுனனுக்கு தேரோட்டிய கிருஷ்ணாவின்
பெயரே பார்த்தசாரதி. கோகுலத்தின் கண்ணனை போன்று
என்னைச் சுற்றி No கோபியர்ஸ் Only அரேபியர்ஸ் மட்டும்.

மேலும் நான் ஹிந்து பத்திரிக்கைக்கு கடிதம் எழுதுபவனுமல்ல..


2. கடைசியாக அழுதது எப்பொழுது?

பதினைந்து மாதத்திற்கு முன்னால், பெட்டியை தூக்கிகொண்டு
சௌதி கிளம்பும்போது அம்மா அழுததால்
என் கண்ணிலும் லேசா..


3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ஓஹோனு இல்லையென்றாலும் ஓரளவுக்கு பரவாயில்ல..
என் இடது பக்க மூளை சிறப்பா செயல்படுறதால
வலது கையால இதுவரைக்கும் ஏதும் எழுதினது இல்ல..
left hand writer,brusher,bowler, etc...
சாப்பிடுறதுக்கு மட்டும் கஷ்டபட்டு ரைட்டுல பழகிட்டேன்.


4. பிடித்த மதிய உணவு என்ன?

அம்மா செய்யும் உருளை கிழங்கு வறுவலும்,
தக்காளி ரசமும்.

இப்போ அதெல்லாம் இல்ல.

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட
நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

என் உள்ளத்து உணர்வின் படியே.
அவர்களின் அணுகுமுறையிலே
தான் இருக்கு என் முடிவு.
எனக்கு நண்பர்கள் அதிகம்...
எதையுமே எதிர்பார்க்காமல் ஓடிவந்து தோள்
கொடுக்கும் என் கல்லூரி கால நட்புகள் தான்
என்னை இன்றளவும் சிலிர்க்க வைக்கிறது.

6. கடலில் குளிக்க பிடிக்குமா, அருவியில் குளிக்க பிடிக்குமா?

இரண்டுமே பிடிக்கும். சுனாமிக்கு பிறகு வேளாங்கண்ணி
கடல் பொலிவிழந்து விட்டது. போன குளிர்காலத்தில்
நண்பர்களோடு சேர்ந்து நடுநடுங்க இராஸ்தனுரா
கடலில் கூட நீந்தினோம்.

எங்கள் வீட்டுக்கு முன்புறம் பெரிய
தாமரைக்குளம் ஒன்று உண்டு.
அதனை ஒட்டிய ஆலமரத்தின் கிளையொன்றிலிருந்து
தலைகுப்பற தண்ணீருக்குள் பாய்வதை இப்போது
நினைத்தாலும் முதுகுதண்டில் ஜிலிரென்றிருக்கிறது.
தரையில் இருந்த நாட்களை விட தண்ணிரில்
மிதந்த நாட்கள் தான் அதிகம்.
காவிரி பாயும் கடைக்கோடியிலிருக்கும்
திருத்துறைப்பூண்டி எனது சொந்த ஊர்..

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முகம் பார்த்துதான்.
அப்படியெல்லாம் முதல் பார்வையிலே
யாரையும் எடைபோடும் திறமை எனக்கில்லை.


8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடிச்ச விஷயம்:

எதையுமே மிக எளிதாக எடுத்துக்கொள்ளும் மனப்பாங்கு.
நம்மள மீறி என்ன நடந்திட போகுதுங்கிற தெனாவட்டுனு
கூட சொல்லலாம்.

பிடிக்காத விஷயம்:

தொப்பைய குறைக்க ஜிம்முக்கு போகலாம்னு
நாலு மாசத்துக்கு முன்னாடியே பிளான் பண்ணியும்
இன்று வேண்டாம்,நாளைக்கு நிச்சயம் போகலாமென்ற
(நாசமாப் போன) என் நம்பிக்கைதான்.

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

இந்த கேள்விக்கு பதில் சொல்ல ஆசையாத்தான் இருக்கு.
ஆனா என்ன செய்ய.


10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

என் தங்கையோட குட்டி பையன் ஆதிஷ்,
பிறந்து ஒரு வயசாகியும் இன்னும் நேர்ல பார்க்கலை.
போட்டோஸ்ல மட்டும்தான்..
சீக்கிரம் போய் பார்க்கனும்.


11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

வெள்ளை சர்ட், அதுக்கு மேட்சிங்க ஒரு பேண்ட்
கலர் சரியா சொல்லத் தெரியல.

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?

ISAIARUVI.COM-ல "ஒரு கல் ஒரு கண்ணாடினு" யுவன் பாடிட்டு இருக்கிறார்.

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

வெளிர் நீல நிறம்..

14. பிடித்த மணம்?

வேறென்ன என் திருமணம் தான்.

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

நட்புடன் ஜமால்: பின்னூட்ட புயல். இவரின் "இரவிலும் உதிக்கும் வானவில்"
படித்ததால் ஏற்பட்ட பாதிப்பு. இவர் பதிவில் உள்ள படங்களும் கவி பேசும்.
தரமான பின்னூட்டங்களின் சொந்தக்காரர். பெரும்பாலன பதிவர்களின்
பதிவை முதலில் சுவைப்பது இவர்தான்.

ஷர்வினா-வின் அப்பா: இவர பத்தி நான் சொல்லி தெரிய வேண்டியதில்ல.
24 மணி நேரமும் இணையத்திலே இருப்பாரு.
ஒரு நாளைக்கு ஒரு பதிவு கூட போடலைனா மண்டையே
வெடிச்சிடும் இவருக்கு.
பல வம்பு வழக்குகளில wanted-அ ஆஜராவாரு.
நல்ல பல பதிவுகளை தருபவர்.

குறிப்பு:
மேற்கண்ட இருவரும் பிரபல பதிவர்கள் என்பதால்
இதை தொடர்வார்களா என்று சிறிய சந்தேகம்.

தொடர மறுத்தாலும் சரியானவர்களையே
அழைத்த மனத்திருப்தியே எனக்கு போதும்.


16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு?

நவாஸ்:என்னை போலவே வளைகுடாவில்
வாடும் ஒரு ஜீவன். குறுகிய கால பழக்கமே
என்றாலும் இவர் என்னிடம் எடுத்துக்கொண்ட
உரிமை நெஞ்சை நெகிழச் செய்கிறது.
"இதுதான் gulf"-னு இவரேட பதிவுல,
எங்களோட வாழ்க்கை முறையை
ரத்தினச்சுருக்கமா சொல்லியிருக்காரு..
இன்னும் பல பதிவுகள் இவரை பற்றிய
மதிப்பை பன்மடங்கு உயர்த்தியிருக்கிறது....
இதுவரைக்கும் பேசுனதில்ல..
நவாஸ் தொலைபேசி எண்ணை எனக்கு தருவீங்களா?


17. பிடித்த விளையாட்டு?

ஒருகாலத்துல கிரிக்கெட்,
இப்போ ரொம்ப யோசிக்க வேண்டியிருக்கு.

18. கண்ணாடி அணிபவரா?

ம்ஹும்.

19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

கமல் படமெல்லாம் பிடிக்கும்.
இப்படித்தான்னு ஒரு வரைமுறை இல்லை.

20. கடைசியாகப் பார்த்த படம்?

"INSIDE" னு ஒரு FRENCH படம், குருரத்தின் உச்சக்கட்டம்..
தனியா யாரும் பார்க்காதீங்க...
பார்க்கனுமா???

21. பிடித்த பருவ காலம் எது?

டிசம்பரின் முடிவும், ஜனவரியின் ஆரம்பமும்..

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

தற்போதைக்கு ஒன்னும் இல்ல.
கடலை மடிச்சு தந்த பேப்பரக்கூட ஒருவரி விடாம
வாசிச்சு வளர்ந்தவன்..
காலம் மாறிப்போச்சு.

23. உங்கள் டெஸ்க்டாப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

அரைமணிக்கொரு தடவை அதுவா மாறிக்கிட்டே இருக்கும்.
உபயம்: jhon's Background Switcher மென்பொருள்...

24. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம்:
OFFSHORE PROJECT-ல இருக்குறதுனால தினமும்
ஒரு மணி நேரம் BOAT-ல பயணம்.
அந்த BOAT சத்தத்துல லைப் ஜாக்கெட்ட மாட்டிக்கிட்டு
தூங்குறது தனி சுகம்.

பிடிக்காத சத்தம்:
அந்த நேரத்திலயும் காதுக்குள்
கத்தும் பிலிப்பைனியர்கள்.
கொடுமை...

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

சௌதி வந்தது தான் அதிகபட்சம்..

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

தெரியலை. என் கூட படிச்ச பசங்கெல்லாம் என்னை
"நீ வாத்தியாரத்தான் ஆகப்போறனு" சொல்லுவாங்க...
அப்படி என்ன தனித்திறமையை கண்டானுங்களோ..

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

அது வேணாம் விடுங்க..


28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

அலட்சியம், சோம்பல், இன்னும் நிறைய...

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

ஊட்டி தான். குடும்பத்தோடு போய் ஒருவாரம் ஆசைதீர தங்கிட்டு வரனும்.

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

என்னை சுற்றி இருப்பவர்கள் அனைவரையும் என்னால் முடிந்தளவு சந்தோசமாய்
வைத்துக்கொள்ளவே ஆசை.

31. மனைவி/கணவன் இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம்?

ஓடுமீன் ஓட உறுமீன் வரும்வரை வாடி இருக்குமாம்
கொக்கு..
உறுமீன் வரட்டும், வந்ததும் சொல்கிறேன்.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழ்க்கை என்னங்க வாழ்க்கை.
"ஓராயிரம் கற்பனைகளும்
ஒன்றிரண்டு நிஜங்களும்"

என்னைத்தொடர்ந்து நான் உரிமையோடு வம்புக்கு பிடித்து இழுக்கும் கைகள்

நட்புடன் ஜமால் மற்றும் சுரேஷ்.

Saturday, May 16, 2009

நாய் வாலை நிமிர்த்த முடியுமா???


உண்மையாத்தான் சொல்றேன்..


இந்த பதிவுக்கும் தமிழக தேர்தல் முடிவுக்கும்
எந்த உள்குத்தும் இல்லை...

மக்களே வீணா எதையாவது யோசிச்சு
குழம்பிடாதீங்க...

எனக்கு அரசியல் தெரியாது...

Thursday, May 14, 2009

வருஷம் ரெண்டே முக்கால் லட்சம் சம்பளம்...நான் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் போது என் வீட்டுக்கு வந்த என் நண்பர்களில் ஒரு சிலரை என் உறவினர்களிடம் அறிமுகப்படுத்தும் போது,

“இவங்கெல்லாம் கேம்பஸ் இண்டர்வியூவில் செலக்ட் ஆனவங்க.
வருஷத்துக்கு ரெண்டே முக்கால் லட்சம் சம்பளம் வாங்க போறாங்க”
என்று பெருமை பொங்க சொல்லித் தொலைத்து விட்டேன்..

இது எத்தகைய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பற்றி சிறிதளவும் அப்போது சிந்திக்கவில்லை.

நீங்கெல்லாம் எங்க உருப்பட போறீங்க? என்று கல்லூரி
வாத்தியாரிடம் அடிக்கடி சாபம் வாங்குன பசங்க நாங்க...

பின்னாளில் படிப்பை முடித்துவிட்டு,
எந்த ஒரு மென்பொருள் நிறுவனத்துக்கும் எங்களிடமிருந்த அளவுக்கதிகமான புத்திகூர்மையும் சாதுர்யமும் தேவைப்படாத காரணத்தினால்,
வேலைத்தேடி சென்னை வந்திறங்கிய மூன்றாவது நாளே எனக்கும், சலாவுதினுக்கும் ஒரு வன்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.
(அப்பாடா... தெளிவா சொல்லியாச்சு...)

மாதம் எட்டாயிரம் சம்பளம். சென்னையின் மிக நெரிசலான எக்மோரில் அமைந்திருந்தது அந்த அலுவலகம்...

“சென்னையின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவுக்கு ஆற்றல் மிகுந்த இளம் பொறியாளர்கள்
தேவை” (Young and Energetic Engineers)

ஹிந்து பத்திரிக்கையின் கடைக்கோடியில் வந்த அந்த விளம்பரத்தின் சாராம்சத்தை தான் மேலே நீங்கள் பார்த்தது.. அதன் விளைவே நாங்களிருவரும் அந்நிறுவனத்தில்...


முதல் நாள் மேலாளரை பார்ப்பதற்காக அலுவலகத்தின் வரவேற்பரையில் நெஞ்சு படபடக்க காத்திருக்கிறோம்...

ஒரு செவத்த பெண்ணொருத்தி வரவேற்பறையில் அமர்ந்திருந்தாள். சௌகார்பேட்டையை சேர்ந்தவளாய் இருக்கக்கூடும் என சலா என் காதில் கிசுகிசுத்தான்.

அந்த அலுவலகமே மிக வித்தியாசமாய் இருந்தது. ஏகப்பட்ட இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் வருவதும் போவதுமாய் இருந்தனர். ஒரே கூத்தும் கும்மாளமுமாய் அந்த அலுவலகமே களை கட்டி இருந்தது.


அந்த மேலாளர் ஒரு வட இந்தியக்காரர். நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசினார். ஒருவாரம் கடும் பயிற்சி என்றும், அதில் தேறினால் தான் கனடாவில் உள்ள தலைமையகத்திலிருந்து
பணி நியமன ஆணை வரும் என்று சொன்னார்.

மேலும் உங்கள் ஒவ்வொருவரையும் நம்பி கம்பெனி பல லட்சங்கள் முதலீடு செய்யப்போகிறது என்றும் சொன்னார்...


இறுதியாக அவர் சொன்னது தான் என்னையும் சலாவையும் சங்கடத்தில் ஆழ்த்தியது. “நாளை முதல் அனைவரும் டை அணிந்து வர வேண்டும்” என்று சொன்னது தான்...


எங்களை போன்று இன்னும் சில நல்லவர்களையும் வேலைக்கு தேர்ந்தெடுத்திருந்தனர்..


பிறகு எல்லோருக்கும் தனித்தனியாக ஒரு பயிற்றுனரை நியமித்தார். அகிலா என்ற பெண் தான் எனக்கு பயிற்றுனர் (ட்ரெயினர்). கொஞ்சம் அதட்டினாலே அழுதுவிடும் முகத்தோற்றம்... சொந்த ஊர் கடலூர் என்றும் தான் ஒரு M.B.A பட்டதாரி என தன்னை அறிமுகப்படுத்தி கொண்டாள்.


சலாவுதின் ஆவலோடு எதிர்பார்த்தது எதுவுமே நடக்கவில்லை. அந்த மேனேஜர் மிக விவரமானவன் போல, சலாவுக்கு ஒரு முரட்டுப் பையனை ட்ரெயினராக நியமித்திருந்தான்…


மறுநாள் 40 ருபாய்க்கு பாண்டி பஜாரில் வாங்கிய டையை கட்டிக்கொண்டு 8 மணிக்கெல்லாம் இருவரும் ஆபிசில் ஆஜரானோம்.


ஆண் பெண் என அனைவரும் கூடியிருக்கும் ஒரு ஹாலில் வைத்து அறிமுகப்படலம் முடிந்து சராமாரியாக எங்களை கேள்விகள் கேட்டார்கள்.


பிறகு ஆடியோ பிளேயரில் பாட்டை போட்டு எங்களை டான்ஸ் ஆடச்சொன்னார்கள். எனக்கு அப்போது தான் லேசாக சந்தேகம் வந்தது. இது உண்மையான கம்பெனி தானா?

ஒரு குண்டு பெண் வந்து எவ்வித சங்கோஜமில்லாமல் கட்டிடம் அதிர ஆடிட்டு போனாள். கூட்டமே அவளுடைய ஆட்டத்தை கண்டு ஆர்ப்பரித்தது.


அடுத்து சலாவுதினை ஆடச்சொன்னார்கள். அவனும் நடுவில் போய் நின்று “தாண்டியா ஆட்டம் ஆட” பாட்டுக்கு அமர்க்களமாய் ஆடி அப்ளாசை அள்ளிக்கொண்டான்.

அடுத்தது என்னுடைய முறை.
கைகாலெல்லாம் உதற என்னால் ஆடமுடியாது என வம்படியாய் மறுத்து விட்டேன்.. எவ்வளவோ சொல்லி பார்த்தார்கள்..

வேலையே இல்லையென்றாலும் பரவாயில்லை முடியாது என்ற நிலமைக்கு வந்துவிட்டேன்...


பிறகு என்னை ஒதுக்கிவிட்டு காலை 11 மணி வரை பல விளையாட்டுக்கள். 11 மணிக்கு மேனேஜரும் கூட்டத்தில் சேர்ந்துக்கொண்டான்.. அடுத்த அரைமணி நேரம் ஒரே சொற்பொழிவு.


“TODAY’S OTHER PEOPLE MONEY IS TOMORROW OUR’S MONEY”

“இன்று அடுத்தவனின் பணம், நாளை முதல் நம் பணம்” என கூட்டமே பெருங்குரலெடுத்து அலறியது..


பின்னர் எல்லோரும் ஆளுக்கு ஒரு ஃபைலை எடுத்துக்கொண்டு கூட்டம் கூட்டமாய் வெளியே கிளம்பினார்கள்...


அகிலா என்னை மின்சார ரயிலேற்றி தாம்பரத்தில் வந்திறக்கினாள். ரயிலில் டை அணிந்து வந்த என்னை கூட்டமே வித்தியாசமாய் பார்த்தது.. வழி நெடுக அகிலாவின் டிப்ஸ் மழை வேறு...தாம்பரத்தில் ஒரு குறிப்பிட்ட ஏரியாவிலிருந்து வீடுவீடாகச் சென்று கதவைத்தட்டி


வீ ஆர் கம்மிங் ஃபிரம் வோடாஃபோன் என்று ஆரம்பித்து நடையாய் நடந்து சிம்கார்டு விக்கிற வேலை என்று தெரிய எனக்கு வெகுநேரம் ஆனது..
வாழ்க்கையே வெறுத்து போனது..


Process Control வாத்தியார் என் மனத்திரையில் வந்து பலமாய் கைதட்டி சிரித்துவிட்டு போனார்...
வாத்தியார் சாபம் பலிச்சுடுமோ..
லேசாக பயம் வந்தது..


மறுநாள் காலை நானும் சலாவும் எட்டு மணிக்கப்புறமும் தூங்கி கொண்டிருக்க என் செல்போன் அழைத்தது.. எடுத்து பார்த்தேன்..
அழைத்தது அகிலாதான்... என்ன சொல்வது என்று தெரியாமல்,
அருகிலிருக்கும் சலாவை உலுக்கி
“டேய் ஆபிசுக்கு கூப்பிடுறாங்கடா”
என்று அவனிடம் கொடுத்தேன்.


அவன் அதை அசால்டாக வாங்கி, அவன் அடிக்கடி சொல்லும் அந்த வார்த்தையை உபயோகித்தான். போங்கடி....................

அதன்பிறகு அவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவே இல்லை...


நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் அது.இப்போதும்கூட எனக்கு ஏதேனும் பணி சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட்டால் வெறும் எட்டாயிரம் காசுக்காக நானும் அவனும் சென்னை வீதிகளில் சிம்கார்டு விற்றதை நினைத்து என்னை நானே தேற்றிக்கொள்வேன்....


வேலைத்தேடி பற்பல கனவுகளோடு சென்னை வந்திறங்கும்
பலரை வந்தவுடன் வாரியணைத்துக்கொள்வது மார்க்கெட்டிங் துறை தான்...


இன்னும் அந்த கும்பல் எங்களைப் போன்ற பல பேரை தேடிக்கொண்டிருக்கும் அதற்காகவே இந்த பதிவு... இளைஞர்களே விழிப்புடன் இருங்கள்.
அந்த நயவஞ்சக கூட்டம் பற்றி நாளை சொல்கிறேன்...

Sunday, May 10, 2009

அம்மா...எனக்கு நடக்க கற்று தந்தவள்
நீ...

உன்னை விட்டு வெகுதூரத்தில்
ஓடிக்கொண்டிருக்கிறேன்...
ஏதுமற்ற இலக்கை நோக்கி...

இங்கு கோயில்களே இல்லையென்று
குறையேதும் இல்லை
எனக்கு.

பர்ஸை திறக்கும்போதெல்லாம்
ஆசிர்வதிக்கிறாள்
அம்மா...

Wednesday, May 6, 2009

அட என்னோட பதிவும் விகடன்-ல வந்திருக்கே!!!


மிகவும் சந்தோசமாய் இருக்கிறது...
சிறு வயதிலிருந்து நான் ஆணந்தவிகடனின்
தீவிர வாசகன்...

சுஜாதா, எஸ்.இராமகிருஷ்ணன் போன்ற
எழுத்துலக ஜாம்பவான்களையெல்லாம்
எனக்கு அறிமுகப்படுத்தியது
விகடன் தான்...

அன்று ஆரம்பித்த விகடனுடனான என் தொடர்பு
இன்றும் தொடர்கிறது...


அப்படி நான் சிறுவயது முதல் பார்த்து படித்து
பரவசமடைந்த விகடனின் வலைதளத்தில் இன்று
என்னுடைய படைப்பும்...
அதுவும் முதல் பக்கத்தில்...

நன்றி...
youthful.விகடன்.com

என்னுடைய பதிவை விகடனில்
பார்க்க இங்கே கிளிக்கவும்..

http://youthful.vikatan.com/youth/parthasarathiarticle06052009.asp

Monday, May 4, 2009

பெண்கள் இல்லாத தேசத்தில் யாரும் குடியிருக்க வேண்டாம்..

டைசியாக மும்பை "மாதுங்கா" இரயில்வே ஸ்டேசனில் பளிச்சென்று ஒரு பெண்ணை
வெகுஅருகில் பார்த்ததாக நினைவிருக்கிறது.

அதன்பிறகு கடந்த 450 நாட்களாக எந்த ஒரு பெண்ணின்
முகத்தையும் இதுவரை பார்க்கவே இல்லை.

சற்று யோசித்து பாருங்கள்,வீட்டிலும் உங்களைச் சுற்றி ஆண்கள்,
தெருவில் இறங்கி நடந்தால் அங்கேயும் ஆண்கள்,
பணிபுரியும் அலுவலகத்திலும் அனைவரும் ஆண்கள்,
அதுமட்டுமில்லாது உணவகங்கள், வாகனங்கள்,
ஏன் பூங்காக்கள் உட்பட நாம் போகும் அனைத்து
இடங்களிலும் ஆண்களே நீக்கமற நிறைந்து இருந்தால்
வாழ்க்கை எப்படி இருக்கும்?

அப்படி தான் இருக்கிறது இங்கு எங்கள் வாழ்க்கை...
இது சதையைப் பற்றிய புலம்பல்கள் அல்ல.
மனம் சார்ந்த பிரச்சனைகள் மட்டுமே.

தொலைக்காட்சியும் இணையமும் இன்னபிற இருட்டு வகையறாக்களும்
தான் பெண்களை பார்க்கும் வாய்ப்பை எங்களுக்கு தந்தன.

எங்கள் வசிப்பிடத்தின் அருகில் உள்ள ஷாப்பிங் மால்களில்
எப்போதாவது பர்தா அணியாத ஒருசில அமெரிக்ககாரிகளையும்,
பிரிட்டிஷ்காரிகளையும் பார்த்ததுண்டு.

ஆனால் அவர்கள் பெரும்பாலும் ஒருவிதமான ஆண்தன்மையோடு
பெண்மையின் நளினத்தை தொலைத்தவர்களாகவே இருந்தார்கள்.

இங்கு பெண்களை பார்க்ககூடிய ஒரே இடம்
மருத்துவமனைகள் தான்..

இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மற்றும் கேரளாவை
சேர்ந்த ஏராளமான செவிலித்தாய்கள் பணிபுரிகிறார்கள்.

அவர்களை பார்ப்பதற்காகவே அடிக்கடி நோய்வாய்ப்படும்
நண்பர்களும் சிலர் உண்டு.

தமிழகத்தை சேர்ந்த பெண்கள் யாரும் இங்கே வேலைக்கு
வருவதில்லையாம்.
அதுவும் ஒரு விதத்தில் நல்ல விஷயம் தான்.

உள்ளூர் பெண்களுக்கு மட்டுமே இது பாதுகாப்பான தேசம்.
மற்றவர்களுக்கு????

Simulation-ல் மட்டுமே பார்க்கும் அவர்களை நேரில்
பார்க்கும் நாள் எந்நாளோ?

இப்போதெல்லாம் எங்கள் கனவில் கூட முரட்டு தாடியுடன்
வரும் அரேபியர்களே அதிகம் ஆக்கிரமிக்கிறார்கள்.


அழகு என்ற வார்த்தைக்கே அர்த்தமில்லாத தேசத்தில்

"சாப்பிட்டியா சாரதி?" எனத் தொலைபேசி வழியாக
பரிவோடு கேட்கும் அந்த ஒற்றை பெண்குரல் தான்
என்னை இன்னும் உயிரோடும் உணர்வோடும் வைத்திருக்கிறது.

எனவே மக்களே!
பெண்கள் இல்லாத ஊரில் யாரும் குடியிருக்க வேண்டாம்..

செய்தியோடை...