Monday, April 27, 2009

வெக்கங்கெட்டவன் சோறு கேட்டானாம் தின்னுட்டு செத்து போக!
கல்யாணத்த பண்ணிக்கிட்டு பிள்ளைய பெத்து போட வேண்டிய வயசுல பாலைவனத்துல வந்து
காஞ்சு கிடக்கிறோமேன்னு பல நாள் வருத்தப்பட்டதுண்டு..

என்னோட பாஸ் (அரேபியர்) ஒரு நாலு நாள் லீவ போட்டுட்டு குடும்பங்குட்டியோட
திடீர்னு வெளியூர் போயிட்டாரு..

இந்த கேப்ல வேற ஒரு குருப் கூட சேர்ந்து வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை...

என்னோட நேரம் அந்த குருப்ல பூராப்பயல்களும் பிலிப்பைன்ஸ்காரன்...

நம்ம காலை கடிக்கிற செருப்பு மாதிரி கூடவே வரும் அவனுங்களுக்கு விளக்கம் சொல்லியே
அலுத்து போயிட்டேன்...

அடிக்கிற வெயில்ல எருமமாடு மாதிரி நிக்கிறானுங்க...
என்னையும் நிக்க சொல்லுறானுங்க...

இந்த லட்சணத்துல அதை முடிக்கலையா? இதை முடிக்கலையா னு கேள்வி வேற..

போங்கடா னு எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு வந்துட்டேன்...

போனப்போகுதுனு உதவி செஞ்சா ஓனர் மாதிரி கேள்வி கேக்குறான்...

"வெக்கங்கெட்டவன் சோறு கேட்டானாம்
தின்னுட்டு செத்து போக!"

"அப்புறம் கொஞ்சம் சோறு கேட்டானாம்
பொண்டாட்டிக்கு கொண்டு போக!"


10 x 13 = எவ்ளோடானு நீங்க கேட்டீங்கன்னா சுமார் பத்து நிமிசம் கணக்கு போட்டுட்டு
23 னு பதில் சொல்லும் கழுத(கணித)புலிகள்...

நாளைக்கு என்னோட தலைவர் வந்துடுவார்.. அவனுங்க தொல்லை ஒழிஞ்சது...

என்னையும் மதிச்சு நான் எழுதுறதையும் படிக்க
வழக்கமா எனக்கு தெரிஞ்ச நாலு பேர் தான் வருவாங்க...

ஆனால் நேற்று ஒரே நாள்ல "சர்க்கரை சுரேசு" புண்ணியத்துல
100 பேருக்குமேல வந்து பார்த்துட்டு போறாங்க...

என் கல்லூரி கால நண்பர்களுக்காகவே இதுவரை பதிவெழுதி வந்தேன்...
இனிமே கொஞ்சம் கவனமா எழுதனும் போலிருக்கு..

மண்டைய பிளக்குற வெயிலும்,அதிகமான வேலைப்பளுவும்
என் மூளையை மழுங்கச்செய்தாலும் எதுனா உருப்படியா எழுத முயற்சி பண்றேன்...

அப்புறம் மேல உள்ள பழமொழிக்கு விளக்கமெல்லாம் கேட்க கூடாது...
பழமொழி சொன்னா அனுபவிக்கனும், ஆராயக்கூடாது..

திரு.சுரேஸ் அவர்கள் நம்ம சரத்பாபு பற்றி வெளியிட்ட 50 வது சிறப்பு பதிவை பார்க்கனுமா?
ரகளையான பதிவு...

http://sureshstories.blogspot.com/2009/04/50-sakkarais-50th-post-exclusive_27.html

Thursday, April 23, 2009

தானும் படுக்க மாட்டாங்க! தள்ளியும் படுக்க மாட்டாங்க...

ஒரு பதிவும் அதற்கான ஒரு பின்னூட்டமும்...

யாரோ அதிசா-ன்னு ஒரு பதிவர் சொல்றத கேளூங்க..

சரத்பாபு என்கிற பெயர் போன வாரம் வரைக்கு அத்தனை சுவாரஸ்யமாய் இருந்ததில்லை. நமக்கு தெரிந்த சரத்பாபு எப்போதும் ரஜினிக்கு நண்பனாய் நிறைய படங்களில் வருவார்.

வெள்ளைவெளேர் என பெட்ரமாக்ஸ் லைட்டின் மேன்டில் போல பளீர் என இருப்பார். எப்போதும் ரஜினிக்கு துரோகம் செய்து கிளைமாக்ஸில் திருந்தி தோஸ்த்தாகி விடுவார். போன வாரமென்று நினைக்கிறேன்.

தமிழ்மணத்தை மேயும் போது சரத்பாபு தென்சென்னையில் போட்டி என்கிற வாசகங்கள் கண்ணில் பட்டது. அட முத்து புகழ் சரத்பாபு சென்னையில் நிற்கிறாரா என வாயை பப்பராப்பா என பிழந்து கொண்டு கிளிக்கி படித்தேன். பிறகுதான் தெரிந்தது இந்த சரத்பாபு வேறு ஆள் என்று.

ஆனாலும் ஏனோ அந்த பதிவு அத்தனை சுவாரஸ்யமாய் இல்லை. லூசில் விட்டுவிட்டேன். சில நாட்களுக்குள் ஆளாளுக்கு சரத்பாபு ஒரு மகான், அவர் ஒரு சிகப்பு மனிதன், அவர் ஒரு எந்திரன் என்கிற ரேஞ்சில் பதிவுகள் போட்டு வந்ததை காணநேர்ந்தது.

யாருப்பா இந்த சரத்பாபு தமிழ்நாட்டில் இருக்கும் நாற்பது தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் போட்டியிடும் ஒரு தனி நபர். எந்த கட்சியும் சாராதவர் அல்லது சுயேட்சை. ஐஐஎம்மில் படித்து எம்பிஏ பட்டம் பெற்றவர். குடிசையில் வாழ்கிறவர்.

இந்தியாவை முன்னேற்ற! பல திட்டங்கள் வைத்திருக்கிறவர். ஆயுத எழுத்து சூர்யாவைப்போல அதிரடியாய் களம் இறங்கியிருக்கிறார்.

ஒருவன் ஏழ்மையில் படித்துவிட்டாதாலும் , சுயமாக தொழில் செய்து முன்னேறிவிட்டதாலுமே அவர் அரசியலுக்கு தகுதியானவர் என்று சொல்வது எத்தனை அபத்தம். பத்தாம் வகுப்பு படித்த ஒரு மிடில்கிளாஸ் இளைஞர் , பல வருடமாய் அரசியலிலும் நாட்டின் முன்னேற்றத்திலும் அக்கறையுள்ள எங்கோ குமாஸ்தாவாய் பணிபுரிகின்ற ஒருவர் இது போல போட்டியிட்டால் நம்மில் எத்தனை இளைஞர்கள் அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டுவோம்.

கட்சி சார்பு அரசியலுக்கும் இந்த ஐஐடி ஐஐஎம் இளைஞர்களின் அரசியலுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாய் தெரியவில்லை. நான் ஐஐடியில் படித்துவிட்டேன் , எனக்கு நிறைய ஆளுமைத்திறன் இருக்கிறது , இட்லிக்கடை வைத்து பலருக்கு வேலை தந்திருக்கிறேன் , நான் எம்பியானால் ஊரையே மாற்றுவேன் என்பது வெறும் விளம்பரமாகவே தெரிகிறது. இதையெல்லாம் புதிய கீதை என்கிற படத்தில் ஏற்கனேவே தேவையான அளவு அலசிவிட்டார்கள்.

இதோ இவருக்கான ஆதரவைத்தருகின்ற படித்தவர்கள் முன்வைக்கும் காரணம் என்ன ? படித்தவர் , பத்தாம்வகுப்பு வரை படிப்பது ஒரு படிப்பு கிடையாதா? . அப்படியானால் குறைந்த அளவு படித்த இளைஞர்கள்? அவர்களுக்கு சமூகப்பார்வை கிடையாதா ஆளுமைத்திறன் கிடையாதா..

தன் இளைமையில் கஷ்டப்பட்டு படித்துவிட்டதால் மட்டுமே ஒருவர் அரசியலுக்கு தகுதியானவர் என்று எதைக்கொண்டு இந்த படித்த மூளையுள்ளவர்கள் நினைக்கிறார்கள் என்பதற்கான காரணம் புரியவில்லை.

எந்த ஒரு அரசியல் பார்வையுமின்றி நடைமுறை சிக்கல்கள் குறித்து சற்றும் கவலையின்றி தான் படித்துவிட்டோம் என்கிற ஒரே தகுதியோடு முன்னிற்கிறார் இந்த இளைஞர்.

அதே தொகுதியில் இன்னும் சிலபல சுயேட்சை வேட்பாளர்களும் நிற்கக்கூடும். அவர்கள் குறித்து யாருக்கும் அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு படித்தவர் அரசியலுக்கு வருவது இதுதான் முதல் முறை என்பதைப்போல ஒரு மாயையான பிம்பம் இங்கே உருவாக்கப்படுகிறது.

சரத்பாபு என்கிற ஒரு படித்த இளைஞர் நேரடியாக அரசியலில் ஈடுபடுவது நிச்சயம் பாரட்டப்பட வேண்டிய ஒன்றுதான். பாராட்டுவோம் அவருக்கான நம் ஆதரவையும் தெரிவிப்போம். அதே வேளையில் பாராளுமன்றத்தேர்தல் குறித்து அறிந்து கொண்டு அவர் போட்டியிட்டிருக்கலாம். தென்சென்னைத்தொகுதி தமிழகத்தின் மிகப்பெரிய தொகுதிகளில் ஒன்று.

விருகம்பாக்கம்,சைதாப்பேட்டை,வேளச்சேரி,மடிப்பாக்கம், (இன்னும் நிறைய இருக்கிறது.. ) முதலான பல ஊர்களை உள்ளடக்கியது. இத்தனை ஊர்களைக் கொண்ட தொகுதியில் போட்டியிட்டு சில ஆயிரம் ஓட்டுக்களை மட்டும் பெற்று தோற்றுப்போவதைக்காட்டிலும் தனது சொந்த ஊரில் தனது ஏரியாவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகையில் கவுன்சிலர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு அந்த சில ஆயிரம் வாக்குகளை வைத்தே வெற்றிப்பெறலாமே. ஆழம் பார்த்து காலைவிடு என ஐந்தாம் வகுப்பிலேயே போதிக்கப்பட்டிருக்கிறது. ஐஐஎம்மிலும் கட்டாயம் கற்றுத்தரப்பட்டிருக்கும்.

ஒரு படித்தவர். பண்புள்ளவர். துடிப்பான இளைஞர். தன்னை அரசியலில் முன்னிறுத்தும் துடிப்புள்ளவர். ஏன் அரசியலையும் அதன் கட்டமைப்பையும் புரிந்து கொள்ளாமல் தான் தோற்றுப் போவது உறுதி (அவர் வெற்றி பெற 1 சதவீதம் கூட வாய்ப்பிலாதபோது) எனத்தெரிந்தும் , குருட்டுநம்பிக்கையில் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தலைவர் வடிவேலுவைப்போல , நான்கு பேர் ஏற்றிவிட்டதால் துடிப்பாய் அரசியல் கட்டதுரைகளிடம், ஏன் வீணாக தன் நேரத்தையும் பணத்தையும் செலவிட்டு அடிவாங்க ஆசைப்படுகிறார் என்பது புரியாத புதிர்.

அவரது தன்னம்பிக்கையையும் முடிவையும் பாராட்டத்தான் வேண்டும். ஆனால் தனது உழைப்பையும் அறிவையும் கொஞ்சம் பொறுத்திருந்து உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட்டு நிரூபித்திருக்கலாம்.

காதல் திரைப்படத்தில் ஒரு பிரபலமான காட்சி உண்டு. சினிமாவிற்கு தகுதியில்லாத முக அமைப்புடையவர் என்கிற சினிமா அளவீட்டின்படியான ஒருவர் தான் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் , அண்ணன் தம்பி அமெரிக்க மாப்பிள்ளைகளாகவெல்லாம் முடியாது என்பார். அதைப்போலத்தான் இருக்கிறது சரத்பாபுவின் செயலும்.

இது போன்ற இளைஞர்கள் தங்களது செல்வாக்கையும் அறிவையும் முயற்சியையும் ஆக்கப்பூர்வமான விடயங்களில் ( வெற்றிபெறக்கூடிய) ஈடுபட்டு இந்தியாவை முன்னேற்றலாம். நூறு சதவீதம் தோற்றுப்போகக்கூடிய விடயத்தில் ஈடுபட்டு பின் தோற்றும் போய் சமூகத்தின் மீது காழ்ப்புணர்ச்சிகொண்டு என்னை இந்த மடசமுதாயம் ஏற்கவில்லை. என்னை தோற்கடித்துவிட்டது என்று புழுங்கி மண்ணாய் போவது எத்தனை மோசமான ஒன்று.

இதோ அந்த பாதையை நோக்கி இன்னும் ஒரு இளைஞன். அவனுக்கு பின்னால் நூற்றுக்கணக்காய் வழி தெரியாத ஆடுகளைப்போல மேலும் பல இளைஞர்கள். அரசியலில் வெற்றி பெறுவது அத்தனை எளிதானது அல்ல என்பதை ஏன் இவர்கள் புரிந்து கொள்வதில்லை என்கிற ஆதங்கமே என்னை இந்த பதிவை எழுதத்தூண்டியது. சரியான வழிகாட்டுதலின்றி அரசியலை தவறாய் புரிந்து கொண்டு தோற்றுப்போய் பின் வெக்ஸ் ஆகி பழைய வாழ்க்கைக்கே திரும்பிய ஆயிரணக்கணக்கான இளைஞர்களில் இன்னும் ஒருவன்.

அரசியலில் ஈடுபட முனையும் இளைஞர்கள் முதலில் அது குறித்து அறிந்து கொள்ளலாம். இங்கே வெற்றி பெறத் தேவையானவைகளை தேர்ந்தெடுத்து உங்கள் கோடாரிகளை கூர்த்தீட்டிக்கொள்ளலாம். எம்பிஏ படித்த இளைஞருக்கு சொல்லித் தரவேண்டியதில்லை எந்த ஒரு செயலையும் முன்னதாகவே சரியாக திட்டமிட்டு செய்யவேண்டுமென்று.. அதை வடிவேலுவே சொல்லித்தந்திருக்கிறார் எதுவா இருந்தாலும் பிளான் பண்ணி பண்ணனும் என்று.

ஏத்திவிட்டு ஏத்திவிட்டே உடம்ப ரணகளம் ஆக்குறதே இந்த பயலுகளுக்கு வேலையா போச்சு.. என்பதாகத்தான் இருக்கிறது சரத்பாபுவின் மீதான இளைஞர்களின் ஆதரவும்.


*******************************************************************************
இப்போ இதையும் படிங்க...

//சர்க்கரை சுரேசு//

எல்லாரும் இதுக்கு முன்னாடி செஞ்சு தோற்று போய்ட்டாங்க...
அது எல்லாம் நடக்காதுனு நீங்க சொல்லுவது தப்புய்யா...

இந்தியா 1983 வோர்ல்ட் கப் விளையாடும் போது இந்தியா ஜெயிக்கும் என்று சொன்னால் உங்கள மாதிரி தான் எல்லாரும் சிரித்து நகையாடி இருப்பாங்க ...

லூஸா நீ! கூட கேட்டு இருப்பாங்க...

ஆனா ஒரு (Underdogs) என்று சொல்ல படும் அதாவது ஜெயிக்க முடியாது என்று சொல்லப்படும் ஒரு அணி செய்தது ஒரு ஹிஸ்டரி...

அதுக்கு அப்புறம் முடியவே முடியாது என்று மார் தட்டும் விமர்சகர்கள் பாரட்டுவது இயல்பே...

அட 1% கூட சாத்தியம் இல்லை என்றே வையுங்க அவருக்கு...
ஆதரவு சொல்லுவதில் தப்பு இல்லையே...

யாரும் ஆட்டு மந்தைபோல் போகவில்லை...
அவரிடம் நிறைய கேள்விகள் கேட்டு பின் அவரின் தன்னம்பிக்கை பார்த்தே இந்த ஆதரவு...

மக்கா அவரிடம் உள்ள தைரியம் பல பேரிடம் இல்லை, வெட்டி வம்பு ரவுடி இல்லை அவர், அவர் படிப்பு மட்டுமே காரணம் இல்லை...

இது வரை அரசியலில் மிக பெரிய ஏமாற்று வேலை நடந்து வருது..

அதை மாற்ற நம்மாலும் முடிவது இல்லை.. வந்த வரையும் எதுக்கு வந்த பேசாம போய் வீட்டுல இரு... நாடு திருந்தாது... உதவாது.. நீயும் என்னை மாதிரி பதிவு போடு...
சம்பளம் வாங்கி சாதரண வாழ்கை வாழு...

எதுக்கு இந்த முயற்சி..

நாங்களும் வர மாட்டோம் வந்தவனை நொல்லை சொல்லியே காலத்தை ஒட்டுவோம்..
என்ன ஒரு வில்லத்தனம்...

ஒரு இளைஞனை ஆதரிக்க ஒரு இளைஞனிடம் பக்குவம் இல்லை...
ஒற்றுமை இல்லை...

அட போங்கயா கைப்புள்ளைனு சொல்லி காமெடி வேற..

MR.சரத்பாபு எதுக்கு அரசியலுக்கு வந்தீங்க? மக்கள் எல்லாம் நாங்க பழைய கட்சிக்கு தான் போடுவோம். நீங்க நின்னா உங்கள எதிர்த்து பதிவு போடுவோம்...

யாரும் முடியாது. இப்படி காந்தி நினைத்து இருந்தால், அந்த ஒல்லி மனிதன் பின்னாடி நாடு வராது தம்பி...

நல்ல வேளை நீங்க எல்லாம் அப்பவே இல்லை. இருந்து இருந்தா,
காந்தி ஒரு கைபுள்ள..
ஆங்கிலேயே பீரங்கி படை ஆயுதத்தை எதிர்த்து ஒண்ணும் பண்ண முடியாது.

நீங்க ஒரு ஒல்லி , படித்த பையன் உங்க கிட்ட உடம்புல சக்தி இல்லை, 4 பேரு ஆட்டு மந்தை போல் வந்துட்டா சுதந்திரம் வந்துடுமா என்று சொல்லி இந்தியாவை அடிமையாய் வைத்து இருப்பிங்க..

வாழ்க தமிழன்! ஒரு தவளையின் கதை போல் தானும் முன்னேற மாட்டான்! செய்யுறவனையும் விடமாட்டான் நம்ம தமிழன்....

அடப்போங்கையா.....

Thursday, April 16, 2009

வந்துட்டாரு ஆய்தஎழுத்து சூர்யா.....

இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற மெசேஜை நேரடியாகவோ, மறைமுகமாகவோ சொன்னது, மணிரத்னம் இயக்கிய 'ஆய்த எழுத்து' திரைப்படம்.

அந்தப் படத்தில் வரும் சூர்யாவின் கதாப்பாத்திரத்தை சரத்பாபு வடிவில் நேரில் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ளனர், தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர்கள்.

ஆம், சரத்பாபு என்ற 29 வயது இளைஞர் தென் சென்னை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். ஏழை குடிசையில் பிறந்த அவர், இப்போது ஒரு தொழிலதிபர் என்றாலும், சினிமாவில் வருவது போன்று ஒரே பாடலின் போது எல்லாமே கிடைத்துவிடவில்லை.

முயற்சி. முயற்சி. முயற்சி.

தாயின் அரவணைப்புடன் இம்மூன்று மட்டுமே அவரது வெற்றிக்குத் தாரக மந்திரமாக இருக்கிறது.

சரத்பாபு : ஓர் அறிமுகம்

மடிப்பாக்கத்தில் ஒரு குடிசையில் பிறந்தவர். அவருடைய அம்மா மடிப்பாக்கத்தில் தெருவோரம் சிறு இட்லி கடை நடத்தியவர். அதன்மூலம் கிடைத்த வருமானத்தில்தான் சரத்பாபுவை படிக்க வைத்துள்ளார். அகமதாபாத் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்டில் எம்.பி.ஏ. பட்டம் பெற்ற சரத்பாபு, புகழ் பெற்ற பிட்ஸ்-பிலானியில் இன்ஜினீயரிங் பட்டமும் வாங்கியவர். இந்திய அளவில் இளைஞர்களின் போற்றுதலுக்குரிய அடையாளம் என்ற புகழ்ச்சி மிக்க 'யூத் ஐகான்' விருதும் பெற்றவர் இவர்.

ஐ.ஐ.எம்-மில் படித்தவர்களெல்லாம் பல லட்சம் மாத சம்பளத்தில் புகழ்பெற்ற நிறுவனங்களில் உயர் பதவிகளில் செட்டில் ஆவதும், வெளிநாடுகள் சென்று கோடிகளில் சம்பாதித்துவிட்டு திரும்பி வந்து டாம்பீக வாழ்க்கை வாழ்வதுமாக இருக்க...

தனியாக தொழில் தொடங்க முனைந்த சரத்பாபு கடன் வாங்கி உணவு விடுதி தொழிலில் இறங்கினார். இவர் முதல் முதலாக காலேஜ் ஒன்றில் கேன்டீன் துவங்கியபோது அதன் துவக்க விழாவுக்கு வந்து இவரை உற்சாகப்படுத்தியவர்,
இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி.

பொதுவாக ரிப்பன் வெட்டும் எந்த நிகழ்ச்சிக்கும் போகாத இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, சரத்பாபு முதல் முதலாக காலேஜ் ஒன்றில் கேன்டீன் துவங்கியபோது அதன் துவக்க விழாவுக்கு வந்து இவரை உற்சாகப்படுத்தினார்.

இப்போது சென்னை, கோவா, ஹைதராபாத் என நகரங்களிலும் உள்ள பல்கலைக்கழக கேன்டீன்களை நடத்திக் கொண்டு, சுமார் 300 பேருக்கு வேலைகளையும் கொடுத்து இருக்கிறார், சரத்பாபு.

அரசியல் நோக்கம் என்ன?

தனது வாழ்க்கையில் வறுமையின் வலியை உணர்ந்த சரத்பாபு, அப்படி ஒரு வறுமை தான் வாழும் சமூகத்தில் இருக்காமல் செய்ய வேண்டும் என்ற நோக்குடனும், அதற்கென அரசியல் துறை மூலமாக தன்னால் இயன்ற சேவைகளை செய்ய வேண்தும் என்ற எண்ணத்துடன்தான் தேர்தலில் களமிறங்கியுள்ளார்.

இளைஞர்களின் வரவேற்பும் உறுதுணையும்!

தென் சென்னையில் வேட்பாளராக களமிறங்கும் சரத்பாபுவுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இது, அவரது இணையதளம், ஃபேஸ்புக், ஆர்குட் போன்ற சோசியல் நெட்வொர்க் தளங்கள் போன்றவற்றில் இருந்தே தெரியவருகிறது.

சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்கள் சிலரும் சரத்பாபுவுக்காக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிவுலக வட்டத்தில் இளைஞர்கள் பலர் முன்வந்து சரத்பாபுவுக்காக தங்களின் பதிவுகள் மூலம் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

காத்திருக்கும் சவாலும் வாய்ப்பும்!

தி.மு.க. கோட்டை என்று வருணிக்கப்படும் தென் சென்னைத் தொகுதியில் சுயேச்சையாக நின்று வெற்றி பெறுவது என்பது சாதாரண காரியமல்ல.

திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, அதிமுகவின் ராஜேந்திரன், பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் இல.கணேசன் ஆகியோர் களமிறங்கும் இந்தத் தொகுதி சரத்பாபுவுக்கு சவால் நிறைந்ததுதான் என்றாலும் ஒரு விஷயத்தை நம்பிக்கை உண்டாகவேச் செய்கிறது.

கடந்த தேர்தலில் இந்தத் தொகுதியில் 47 சதவித வாக்குகள் மட்டுமே பதிவானது. ஆளும் கட்சி, எதிர்கட்சிகள் என அனைத்து தரப்பின் மீதும் அதிருப்தி அடைந்துள்ளதால் 53 சதவிகித மக்கள் வாக்களிக்கவில்லை என்று கருதும்போதும், தற்போதைய சூழலில் அதிருப்தி உள்ளவர்களுக்கு ஒரு மாற்றாக இருக்கக் கூடும் என்பதாலும் தீவிர பிரசாரம் செய்யும் பட்சத்தில் சரத்பாபு புயல் வீசினாலும் ஆச்சரியபடுவதில்லை.

தற்போது 49ஓ குறித்த விழிப்பு உணர்வு ஓரளவு இருக்கும் பட்சத்தில், தென் சென்னை வாக்காளர்கள் 49 ஓ-க்கு பதிலாக சரத்பாபுவை நாடக்கூடும்.

கிரிக்கெட்டில் மட்டுமல்ல... அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடியாது.

''என்னோட சின்ன வயசில எங்க அம்மா சாப்பாடு வேணாம்டானு சொல்லிட்டு, அடிக்கடி தண்ணி குடிச்சுக்கிட்டே இருப்பாங்க. 'தண்ணின்னா அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும் போலிருக்கு'னு சின்னப் பையன் நானும் நினைச்சுட்டு இருந்தேன்.


அப்புறம்தான் தெரிஞ்சது, இட்லி கடையில் கிடைக்கிற வருமானத்தை வச்சு அம்மா, நான், ரெண்டு அக்கா, ரெண்டு தம்பினு ஆறு பேர் எப்படி சாப்பிட முடியும்? அதான் எங்க அம்மா தண்ணீரை குடிச்சே வயித்தை நிறைச்சுட்டு இருக்காங்க.

ஆனாலும் என் வயித்துக்கும், அறிவுக்கும் பட்டினி போடாம நல்லா படிக்க வச்சாங்க. படித்து முடிச்சதும் பல லட்ச ரூபாய் சம்பளத்துக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்ல வேலை வாய்ப்புகள் வந்துச்சு.

எனக்கு அதெல்லாம் பெரிசா தெரியலை. எங்க குடும்பம் பட்டிருந்த கடனை அடைக்க ஒரு கம்பெனியில் கொஞ்ச நாள் வேலை செய்தேன். பிறகு, அம்மா நடத்தி வந்த அதே இட்லி கடையை நடத்த ஆரம்பிச்சேன்.

தாய் எட்டடி பாய்ஞ்சா, குட்டி பதினாறு அடி பாய்ஞ்சு ஆகணுமில்லையா? அதனால கடைய கொஞ்சம் பெரிசா ஆரம்பிச்சேன். சென்னை, கோவா, பிலானி, ஹைதராபாத்னு பல ஊர்கள்ல இருக்கும் பல பல்கலைக்கழக கேன்டீன்களை இப்ப நடத்திக்கிட்டு இருக்கேன்.

வருஷத்துக்கு ஏழு கோடி ரூபாய் புழங்கும் இந்த பிசினஸ் மூலமா சுமார் 250 பேருக்கு வேலையும் கொடுத்திருக்கேன்.

பணம் எந்த விதத்துலயும் என்னை மாத்திடலை. முன்ன இருந்த அதே மடிப்பாக்கம் ஏரியா வீட்லதான் இப்பவும் இருக்கேன்.

சின்னப் புள்ளையில இருந்து பாத்துப் பழகின மாமா பொண்ணைத்தான் கட்டிக்கிட்டேன். நான் டாக்டர் கிடையாது. ஆனா, ஸ்கூலுக்கு போற ஒரு பையனை பார்த்தாலே அவன் சாப்பிட்டிருக்கானா இல்லையான்னு கண்டுபிடிச்சுடுவேன். கண்டுபிடிச்சு என்ன பிரயோஜனம். அவன் சாப்பிட ஏதாவது வழி செய்யணுமில்லையா..?

அதனாலதான் தென்சென்னை வேட்பாளரா போட்டி போடறேன். நான் போட்டி போடறேன்னு கேள்விப்பட்டதுமே, எனக்கு அறிமுகம் இல்லாதவங்ககூட என்னோட சேர்ந்து எனக்காக வாக்கு சேகரிக்கிறாங்க.

அரசியல்னாலே ஒதுங்கிப் போறவங்களை, குறிப்பா இளைஞர்களை அரசியலுக்குக் கொண்டுவந்து அதை சேவை செய்கிற தளமா மாத்தணும்.

அதுதான் என்னோட ஒரே திட்டம்!'' என நெஞ்சை நிமிர்த்துகிறார் சரத்பாபு.

என்ன சொல்ல..?

ஒரு நல்ல குடிமகன் என்ற முறையில் தேர்தலில் வாக்கு அளிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வு இல்லாத சில இளைஞர்கள் மத்தியில்…

படித்த இளைஞர், சமூக அக்கறை கொண்டவர், அரசியலைச் சுத்தப்படுத்தத் துடிக்கும் இளம் ரத்தம் என்ற வகையில் தென்சென்னை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் நம்ம சரத்பாபுவுக்காக பிரச்சாரம் பண்ணுவோம் வாருங்கள்..!

டாக்டராகணும், எஞ்சினியராகணும், வக்கீலாகணும்… இப்படி பல துறைகளை அடுக்கிக் கொண்டே செல்லும் இளைஞர்களில் ஒரு சிலர் கூட அரசியல் துறையில் ஈடுபட வேண்டும் என்று மனமுவந்துச் சொல்வதில்லை. மக்களுக்கு நேரடியாகச் சேவையாற்றக் கூடிய அந்தத் துறையில் பொறுப்புள்ள இளைஞர்கள் அக்கறை செலுத்தாத காரணத்தினால்தான், அந்தத் துறை இப்போது தன்னலம் மிகுந்த பலரது கைகளில் சிக்கித் தவிக்கிறது. அதை மீட்டெடுக்காமல் முடங்கிக் கிடக்கும் இளைஞர்கள் மத்தியில்…

பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமே படிப்பு என்று நினைத்திருக்கும், மனத்தில் பதியச் செய்யப்பட்டிருக்கும் இளைஞர்கள் பலரது
மத்தியில்…

இதோ ஓர் உண்மையான அக்கறையுள்ள இளைஞர் சரத்பாபு...

நாம் தான் தென்சென்னைத் தொகுதியில் இல்லையே? நாம் எப்படி வாக்களிக்க முடியும் என்று கேட்கலாம். நாம் பிரச்சாரம் மட்டும் செய்வோம், அதுவும் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து கொண்டு..


ஏதோ என்னால் முடிந்த சிறிய உதவி...

செய்தியோடை...