Monday, June 20, 2011

எத்தனை வசீகரம் அந்த கண்களில்...

கோடிக்கணக்கானவர்கள் நெஞ்சில்
புரட்சித்தீயை ஏற்றியது
"நாளை மலரப்போகும் ஒரு பூ"
என்றால் நம்புவீர்களா?

ஆம்...

அர்ஜென்டினா மொழியில் "சே" (Che) என்றால்
"மொட்டு" என்று அர்த்தமாம்.

சேகுவேரா-வை பற்றிய
புத்தகம் ஒன்றை படிக்கும் வாய்ப்பு கிட்டியது.
அவரை பற்றி ஏற்கனவே அரைகுறையாக
தெரிந்திருந்தாலும்,
பொதுவாகவே வரலாற்று புத்தகங்கள்
படிக்க எனக்கு அத்தனை சுவாரசியம்
இல்லையென்றாலும் அந்த முகம் என்னை
மேலும் படிக்க வைத்தது.
எத்தனை வசீகரம் அந்த கண்களில்...


























அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து
உலக மேடைகளில் கர்ஜித்தவர்,
கியூபாவின் அமைச்சராக விமானங்களில்
பறந்து உலகத் தலைவர்களோடு விவாதித்தவர்,
பொலிவியா வின் ஏதோ ஒரு காட்டுக்குள்
கையில் துப்பாக்கியுடன் கொரில்லா கூட்டத்தை
தலைமை தாங்கி ஏன் போய்க்கொண்டிருந்தார்
என்பதை மிக நேர்த்தியாக விவரிக்கிறது
அப்புத்தகம்.

உலகத்தின் மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு
மனிதனின் வாழ்க்கை கதை.

இலட்சக்கணக்கான பக்கங்களில்,
ஆயிரம் வருடங்கள் வேண்டுமானாலும்
சேகுவேராவை எழுதிக் கொண்டிருக்கலாம்"
என்கிறார் எழுத்தாளர் மார்கோஸ்.

உண்மைதான் அவருடைய 39 வருட வாழ்க்கையை
மிக சுருக்கமாக விளக்க முடியாது தான்.
இருந்தாலும் முயற்சிக்கிறேன்.

துரைராஜ் வாத்தியார் சொல்லிகொடுத்த
முதாலம் உலகப்போரின் காரணங்கள்
என்ன என்பதை மண்டையில் குட்டிக்கொண்டே
மன்னார்குடியில் மனப்பாடம் செய்ததெல்லாம்
இப்போது நினைவிலிருப்பதாக தெரியவில்லை.

அர்ஜெண்டினாவில் பிறந்திருந்தாலும்
கியூபா புரட்சியின் மூலமாகவே உலகிற்கு
அறியப்பட்டார் Che.

தென் அமெரிக்காவிற்கும் வட அமெரிக்காவிற்கும்
இடையே அட்லாண்டிக் மகா சமுத்திரத்தில்
இருக்கும் ஒரு குட்டியூண்டு தேசம்தான்
கியூபா. விவசாயமும், சுருட்டு மற்றும்
மதுபான உற்பத்தியும் அதன் பிரதான
தொழிலாக இருந்தது.

அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்டின் அன்பிற்குரியவராக
இருந்த பாடிஸ்டா 1952-ல் இராணுவ புரட்சியின் மூலம்
கியூபாவின் ஆட்சியை கைப்பற்றி
அமெரிக்க கைக்கூலிகளுக்கு சேவகம்
செய்து கொண்டிருந்தார்.

ஒருநாள் பாடிஸ்டா கியூபாவை விட்டு
வெளியேற்றப்பட்டார்.

சர்வ வல்லமை பொருந்திய அமெரிக்காவின் ஆதரவு
தனக்கிருந்தும் பாடிஸ்டா எதற்காக கியூபாவை
விட்டு வெளியேறினார்?
அவரை வெளியேற்றுமளவு வீறுகொண்ட
புரட்சியை முன்னின்று நடத்தியது யார்?
இந்த கேள்வியை ஒருவேளை நாம் பாடிஸ்டா-விடமே
கேட்க நேர்ந்தால் அவர் சுட்டுவிரல் நீட்டுவது
இந்த இருவரை நோக்கி தான்.

சேகுவேரா
பிடல் காஸ்ட்ரோ.

1952ல் கியூபாவில் அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் இளமையும் செயல் திறனும் கொண்ட
பிடல் காஸ்ட்ரோ வேட்பாளராக போட்டியிட்டார்.
அந்த வேளையில் கியூபா மக்கள் கட்சியின் செல்வாக்கு
மக்களிடையே மிகவும் பிரபலம்.
தேர்தலில் பிடல் காஸ்ட்ரோ வெற்றி பெறும் நிலையில்
இருந்தார். இந்த சூழலில் தேர்தலை நடத்த விடாமல்
இராணுவத்தின் துணையுடன் பாடிஸ்டா நாட்டின்
அதிகாரத்தை கைப்பற்றினார்.

அப்படிபட்ட தருணத்தில் தான் 1955-ல்அந்த மகத்தான
மனிதரை சந்தித்தார் காஸ்ட்ரோ.
அச்சந்திப்பு பாடிஸ்டாவை தெருவில் நிறுத்தபோவது
தெரியாமல் கியூபா நிசப்தமாய் இருந்தது.

திட்டம் தயாரானது.

உலக வரலாற்றில் பெயரைப் பொறித்துக் கொண்ட
'கிராண்மா’ படகு அமெரிக்கர் ஒருவரிடம் இருந்து
15,000 அமெரிக்கா டாலர்களுக்கு விலைக்கு
வாங்கப் பட்டு ஒரு சுபயோக சுபதினத்தில்
கியூபாவை நோக்கி சீறிப்பாய்ந்தது.
இருபது பேர் மட்டுமே பயணிக்கக்கூடிய அப்படகில்
எண்பத்து இரண்டு பேர் இருந்தனர்.
உணவு, குடிநீர், கொஞ்சமே கொஞ்சம்
ஆயுதங்களையும்
சுமந்து கொண்டு படகு நீரில் நீந்தி
கியூபாவை அடைந்தது.
"சியாரா மாஸ்ட்ரா" மலைகளில் தளம்
அமைத்தனர்.

ஆளும் இராணுவத்தின் ஏழாயிரம் படைவீரர்கள்
பயங்கர ஆயுதங்களோடு வந்தபோதும்
வெறும் 300 பேர்களைக் கொண்ட
மிகச்சிறிய கொரில்லா புரட்சிப்படையை கொண்டு
1956-ல் கியூபாவின் "Santa Clara" நகரை கைப்பற்றி
பாடிஸ்டா-வை கியூபாவை விட்டே விரட்டினார்கள்.
அதில் சேகுவேராவின் பங்கு மகத்தானது.
இத்தனைக்கும் சே ஒரு மருத்துவராக தான்
அப்படையில் சேர்ந்திருந்தார்.

(பொறியியல் படிக்க திட்டமிட்டதை மாற்றி
1947 ல் புயெனெஸ் எயர்ஸ் (Buenos aires)
பல்கலைகழகத்தில் மருத்துவம்
படித்திருந்தாராம் சேகுவேரா)

தனது உறுதியான
தலைமை பண்பின் மூலம் பிடல் காஸ்ட்ரோவால்
கவரப்பட்டு இராணுவ கமாண்டராக
தரம் உயர்த்தப்பட்டார்.

இங்கே ஒரே வரியில் சொன்னது போல் அத்தனை
எளிதான காரியமல்ல பாடிஸ்டாவை கியூபாவை விட்டு
விரட்டியது. போராட்டம்.
மிக கடுமையான போராட்டம்.

பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் புதிய அதிபராக
பதவியேற்றார்.அமெரிக்காவின் ஆதிக்கம் மெல்ல மெல்ல
கியூபாவில் தளர துவங்கியது.
அமெரிக்க வர்த்தகர்களின் பொருளாதார ஆதிக்கத்தையும்
அதன் விளைவாக கியூபா அடிமையாவதையும்
கண்ட காஸ்ட்ரோ சாட்டையை சுழற்ற ஆரம்பித்தார்.

இதோ இன்றுவரை
அமெரிக்காவின் சாகசங்கள்
அவரிடம் எடுபடாமலேயே போயிற்று.

அந்த குட்டி தேசத்தின் மீது அடுக்கடுக்காய்
பொருளாதார தடைகளை விதித்து
அமெரிக்கா ஆத்மசாந்தி அடைந்தது.

ஆனால் காஸ்ட்ரோவோ
சேகுவேராவிற்கு கியூபா குடியுரிமையையும் கொடுத்து
தொழில் துறை தலைவராகவும், பின்பு
தேசிய வங்கியின் அதிபராகவும் நியமித்தார்.

சோவியத் ரஷ்யாவின் துணைகொண்டு
பொருளாதார தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்தார் சே.
உலகின் சர்க்கரை கிண்ணமாய் நிமிர்ந்து
நின்றது கியூபா.

"அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட எண்ணெய் கப்பலை
கியூபாவிற்கு செல்ல தடை விதித்தபோது
ரஷ்யாவிலிருந்து பல எண்ணெய் கப்பல்கள்
கியூபாவை நோக்கி வரும்" என்று ஐ.நா சபையிலேயே
அறைகூவல் விடுத்தார்.

அமெரிக்கா விக்கித்து நின்றது,
இருக்காதா பின்னே!
அவர் ஐ.நா சபையில் உரையாற்றியது
எங்கே?
அமெரிக்காவின் நியுயார்க் நகரில்....

சில வருடங்கள் கழித்து கியூபாவை போன்றே
மற்ற இலத்தின் அமெரிக்க நாடுகளிலும் புரட்சி விதையை
விதைக்கும் தன்னுடைய கனவை நனவாக்க
கியூபா தொழிற்துறை அமைச்சர் பதவியை துறந்துவிட்டு
காஸ்ட்ரோ விடம் விடைப்பெற்று இரகசியமாய் கியூபாவை
விட்டு வெளியேறி விட்ட சேகுவேராவை காணமல்
தவித்தனர் கியூபா மக்கள்.

ஊடகங்களில் தவறான பல தகவல்கள்
உலா வருகின்றன.

காஸ்ட்ரோவை விட்டு பிரிவதற்கு முன் சே எழுதிய
கடிதத்தை 3 மாதத்திற்கு பிறகு ஒரு பொதுக் கூட்டத்தில்
காஸ்ட்ரோ படித்தார். அதில்

"என்னை கியூபாவின் புரட்சியுடன் தொடர்புபடுத்திய
கடமை முடிந்துவிட்டது. அந்தக் கடமையை
நான் செவ்வனே முடித்து விட்டேன். உங்களிடமும்,
மற்ற காம்ரேடுகளிடமும், என்னுடைய மக்களாகிவிட்ட
கியூபன் மக்களிடமும் நான் விடைபெறுகிறேன்"
என்று எழுதியிருந்தார்.

மேலும் அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள
அதி அற்புதமான நட்பை விவரிக்கிறது அந்த கடிதம்.

அமெரிக்காவின் சி.ஐ.ஏ தனது கழுகு பார்வையால்
சே வை சல்லடை போட்டு தேடிக்கொண்டிருந்தது.
சேகுவேரா தன்னுடைய அடுத்த கட்ட
போராட்டத்திற்காக பொலிவியா-ஐ தேர்ந்தெடுத்தார்.
அதற்கான காரணம் தென்னமெரிக்காவில்
பொலிவியா பாஞ்சாலி போல் ஐந்து பிற நாடுகளுடன்
தன் எல்லையை பகிர்ந்து கொண்டிருந்தது.

பொலிவியாவில் கொரில்லாப் போராட்டம் வெற்றி
பெறுமேயானால் அதை மற்ற ஐந்து நாடுகளுக்கும்
மிக எளிதாக பரவச் செய்துவிடலாம் என்று
சேகுவேரா நினைத்தார்.

அதற்கான பூர்வாங்க வேலைகளை தானே
முன்னின்று நடத்தினார்.
ஆனால் நிலைமை அவ்வளவு சாதகமாக இல்லை.
பொலிவிய இராணுவத்தினரால்
1967ம் ஆண்டு தண்ணீர் கூட
கிடைக்காத காட்டுப்பகுதியில்
பிடிக்கப்பட்டு ஒரு மருத்துவமனையில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார் சே.

இரண்டு கைகளையும் விரித்து வைத்து
அவரைச் சுட்டு கொன்ற அந்த கோழைகள்
அவர் இறந்த பிறகும் பயம் நீங்காதவர்களாக
அவருடைய கைகளிரண்டையும் வெட்டி
தனியே புதைத்து விட்டார்களாம்.

சேகுவேராவின் இறப்பை நம்ப முடியாத கியூபா
மக்கள் அவர் மீண்டும் உயிரோடு வருவார்
என்று தீவிரமாக நம்பினர்.

தனது வாழ்நாளில் எந்த கொள்கைகளில் நம்பிக்கை
வைத்திருந்தாரோ, அதற்கு விசுவாசமாக
சேகுவேரா இருந்தார்.
உறுதியான மனநிலை, அசாதாரணமான தைரியம்,
உயர்ந்த மனிதாபிமானம் கொண்டவர்.
தனது நாட்டிற்காக கடைசிவரை போராட வேண்டும்
என்ற உறுதி அவரிடம் இருந்தது.
அவரது செயல்கள், சாகசங்கள் மற்றும் செயல்திறன்
ஆகியவை புரட்சிகர மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு
உணர்வுகளோடு கலந்திருந்ததால் நியாயமான
விஷயங்களுக்காக அவரைப் போராட வைத்தது.

கியூபாவில் இன்றும் ஒவ்வொரு
அக்டோபர் 8ம் தேதியன்று சே குவேராவின்
நினைவு நாளாக அவரது பங்களிப்புக்கு
தலை வணங்கி போற்றுகின்றனர்.
ஒவ்வொரு நாளும் கியூப குழந்தைகள்
"நானும் சேகுவேராவை போலாவேன்" என்று
உறுதி எடுத்துக் கொள்கின்றனர்.

தான் பிறந்த ஊரை மறந்து எங்கோ வாழும்
மக்களின் துயர் துடைக்க கள்ளத் தோணியில்
கரிபியன் கடலை கடந்த சே குவேரா
பின்னாட்களில் உலகின் மூலை முடுக்கிலெல்லாம்
தன் இனவிடுதலைக்காக போராடும் அத்தனை
சிறுசிறு குழுக்களுக்கும் கூட
ஆதர்ச நாயகனானார்.

தன்னுடைய நம்பிக்கைகளை உண்மையென்று
உணர்த்த தன்னையே பணயம் வைக்கும்
ஒரு சாகசக்காரன் தான் நான்....

-சே குவாரா தன்னை பற்றி சொல்லிக்கொண்டது
இது.

சேகுவேராவை முற்றிலும் அழித்துவிட்டதாக
ஒரு கூட்டம் மார்தட்டிக்கொண்டது.

கிறிஸ்டோபர் லீக் சொன்னது போல

அவர்கள் நினைத்து போலில்லாமல் நீ
வாழ்ந்து கொண்டிருக்கிறாய், சே!

கோடிக்கணக்காவர்களின் நெஞ்சில் மட்டுமல்ல
மார்பிலும் கூட.

ஆம் மார்பில்.












விளக்கை அணைத்துவிட்டு போர்வைக்குள்
புகுந்து தூங்க முயற்சித்தேன்.
அத்தனை இருட்டிலும் தலையில் நட்சத்திரம்
மின்ன அந்த முகம்...

எத்தனை வசீகரம் அந்த கண்களில்....

...

2 comments:

அப்துல்மாலிக் said...

arumai மேலும் படிக்க தூண்டுகிறது உமது எழுத்து

sarathy said...

Thanks Malik...

செய்தியோடை...