Sunday, June 21, 2009

என்னை மன்னிப்பீர்களா அப்பா?


ஊரும் உறவும் உங்களை சுற்றி
I.C.U வில் நீங்களும்...
பல்லாயிரம் மைலுக்கு அப்பால் நானும்
செயலற்ற நிலையில்...

இந்த வாராத மகனை மன்னிப்பீர்களா அப்பா?

சிறு நெருஞ்சிமுள் குத்தினாலே
தாங்க முடியாத நீங்கள்
எப்படியப்பா துணிந்தீர்கள்?
ஐந்து மணி நேரம்
நெஞ்சை கிழித்து இதயத்தை காட்ட...

இந்த பத்து நாட்களில் என்னவெல்லாம்
நினைத்திருப்பீர்கள்?

அறிவியல் படித்த அகந்தையில்
இறைவனின் இருப்பையே மறுத்த எனக்கு
தெய்வமாய் தெரிகிறார்கள்
உங்கள் உயிர்காத்த மருத்துவர்கள்...

ஒருவேளை சிறுவயதில்
விளையாட்டாய் சொல்வது போல்
நான் "தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை" தானோ?
பாசமற்று பரதேசத்தில் கிடக்கிறேனே இன்று...

தலையில் தண்ணீரை அள்ளி அள்ளி
ஊற்றிக்கொள்கிறேன்...
ஆனாலும் நெஞ்சு கணக்கிறது...

எனக்கும் சொல்லுங்களேன்...
நெஞ்சில் சுமக்கும் ரணங்களை
நீரால் கழுவும் வித்தை
தெரிந்தவர் எவரேனும்?

.....

30 comments:

ஜோசப் பால்ராஜ் said...

உங்கள் தந்தை நோய்வாய்பட்ட போது உடனிருக்க முடியாது போனமைக்கு உருகும் உங்கள் பாசத்திற்கு தலை வணங்குகிறேன்.

துபாய் ராஜா said...

"ஒருவேளை சிறுவயதில்
விளையாட்டாய் சொல்வது போல்
நான் "தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை" தானோ?
பாசமற்று பரதேசத்தில் கிடக்கிறேனே இன்று..."

நெகிழச்செய்த வரிகள்.

அன்புதந்தை உடலும்,உள்ளமும் பலம் பெற்று நோய் நீங்கி பல்லாண்டு வாழ நல்வாழ்த்துக்கள்.

எனது தந்தையர் தின கவிதை இங்கே சென்று படியுங்கள். http://rajasabai.blogspot.com/2009/06/blog-post_20.html

*இயற்கை ராஜி* said...

நெகிழச்செய்தன

நட்புடன் ஜமால் said...

தந்தையர் தினத்தில் நல்ல ஒரு நினைவு கூறல் ...


\\நான் "தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை" தானோ?\\

இத மாதிரி நானும் நினைத்து கொண்டது உண்டு ...

வினோத் கெளதம் said...

கூடிய விரைவில் புத்தம் புதிய மனிதராக நம் தந்தை மறுபடியும் வலம் வர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

நெகிழ்ச்சி ஆன பதிவு.தந்தை பூரண குணமாக வாழ்த்துக்கள்.

நாமக்கல் சிபி said...

உங்கள் தந்தை பரிபூரண நலமடைவார்!
உங்கள் பாசம் அவரோடு இருக்கும்!

நாங்களும் பிரார்த்திப்போம்!

நெகிழ்ச்சியான பதிவு!

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

இதை உங்கள் அப்பா வாசித்தால் நிரம்ப மகிழ்வார். அதன்பின் அவர் நலமோடே இருப்பார்.


பி.கு. எனக்கு அப்பா இருந்தா எப்பிடி இருப்பார், இல்லாட்டி எப்பிடி இருக்கும் எண்டெல்லாம் தெரியாது. கவலையும் இல்லை சந்தோசமும் இல்லை.

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

இதை உங்கள் அப்பா வாசித்தால் நிரம்ப மகிழ்வார். அதன்பின் அவர் நலமோடே இருப்பார்.


பி.கு. எனக்கு அப்பா இருந்தா எப்பிடி இருப்பார், இல்லாட்டி எப்பிடி இருக்கும் எண்டெல்லாம் தெரியாது. கவலையும் இல்லை சந்தோசமும் இல்லை.

sakthi said...

சிறு நெருஞ்சிமுள் குத்தினாலே
தாங்க முடியாத நீங்கள்
எப்படியப்பா துணிந்தீர்கள்?
ஐந்து மணி நேரம்
நெஞ்சை கிழித்து இதயத்தை காட்ட...

பைபாஸ் சிகிச்சையா சாரதி....

sakthi said...

எனக்கும் சொல்லுங்களேன்...
நெஞ்சில் சுமக்கும் ரணங்களை
நீரால் கழுவும் வித்தை
தெரிந்தவர் எவரேனும்?

நெகிழ வைத்த பதிவு

உங்கள் தந்தை சீக்கிரம் குணமடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் ....

Suresh said...

உங்கள் தந்தை சீக்கிரம் குணமடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் ....

Suresh said...

நெகிழ்ச்சியான பதிவு சாரதி

S.A. நவாஸுதீன் said...

தைரியமா இருங்க சாரதி. ஊர்ல போயி அப்பாகிட்ட மறுபடியும் செல்லமா திட்டு வாங்கத்தான் போறீங்க (பாரு இவன ஒழுங்கா சாப்பிட மாட்டேன்குறான். பேசாமா அன்னைக்கு இவன தவிட்டுக்கு வாங்காமலே இருந்திருக்கலாம், தவிடாவது மிச்சமா இருந்திருக்கும்னு).

So Don't worry dear. அப்பா பரிபூரண குணமடைய எப்போதும் இந்த நண்பனுடைய பிரார்த்தனை உண்டு சாரதி.

S.A. நவாஸுதீன் said...

தலையில் தண்ணீரை அள்ளி அள்ளி
ஊற்றிக்கொள்கிறேன்...
ஆனாலும் நெஞ்சு கணக்கிறது...

எனக்கும் சொல்லுங்களேன்...
நெஞ்சில் சுமக்கும் ரணங்களை
நீரால் கழுவும் வித்தை
தெரிந்தவர் எவரேனும்?

அப்பாவே போன் பண்ணி எனக்கு ஒன்னும் இல்ல, நீ தைரியமா இருடா, உடம்ப பத்திரமா பார்த்துக்கோன்னு 2 நாள்ல சொல்வார். வேற என்ன வேணும் உங்களுக்கு.

அப்துல்மாலிக் said...

மனதை நெகிழவைத்த பதிவு சாரதி

வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இப்படிதான் சுக/துக்கத்தில் பங்கு கொள்ளமுடியாமல் தவிக்கும் மனது

அப்துல்மாலிக் said...

அப்பா விரைவில் குணமடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்... நிச்சயம் திரும்ப நல்ல உடல்நிலையுடன் வருவார்

Muruganandan M.K. said...

"நெஞ்சில் சுமக்கும் ரணங்களை
நீரால் கழுவும் வித்தை ,,,"
உங்கள் தந்தை மீண்டும் பூரண சுகம் பெறப் பிரார்த்திக்கிறேன்.

Anonymous said...

உங்கள் தந்தை பரிபூரண நலமடைவார்!
உங்கள் பாசம் அவரோடு இருக்கும்!
by
syed rahman
Al-khobar
KSA

sarathy said...

என்னுடைய சில கடினமான நேரங்களில்
முகம் தெரியாத
எனக்காக பிரார்த்தித்த அனைத்து
நல் உள்ளங்களுக்கும்
என் ஆத்மார்த்தமான நன்றி.


நவாஸ்
சக்தி
ஜமால் அண்ணன்
வினோத் கௌதம்
அபுஅஃப்ஸர்
சுரேஸ்
இயற்கை
T.V.இராதகிருஷ்ணன்
நாமக்கல் சிபி
துபாய் ராஜா
மதுவதனன்
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
சையத் ரஹ்மான்

மேலும்...

சரவணன்
முஜம்மில்
ரத்தீஸ்
அகமது தங்கல்
சலாவுதீன்
சதீஸ்
ஷேக் ஆலம்
எல்லாம் வல்ல இறைவனுக்கும்...

hari raj said...

பரிபூரண குணமாக வாழ்த்துக்கள்.

ஈரோடு கதிர் said...

தங்கள் தந்தை விரைவில் குணமடையட்டும்

பொன் மாலை பொழுது said...

அண்ணாத்த அப்டியே கொஞ்சம் நம்ம பக்கமா வந்து பாத்துகினு போன .
ponmaalaipozhuthu.blogspot.com


Your Dad will get well soon.

கல்கி said...

கவலைப்படாதீங்க சாரதி.

அப்பா சீக்கிரம் குணமாயிடுவார்.
நீங்கள் அருகில் இருக்க முடியாத சூழ்நிலையையும் புரிந்து கொள்வார். உங்களின் அன்பும் எங்களின் பிராத்தனைகளும் அவரை சீக்கிரம் குணமாக்கும்

sarathy said...

நன்றி..

ஹரிராஜ்...
கதிர்...
மாணிக்கம்...
கல்கி...

மருத்துவர்
ஆலோசனைபடி
அப்பா நலமுடன் வீட்டில்
ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறார்..

தினமும் இரண்டு முறையாவது
தொலைபேசி விடுகிறேன்.

பிரார்த்தித்த அனைவருக்கும்
என் நன்றி.

SUMAZLA/சுமஜ்லா said...

www.sarathy.tk மூலமாக வந்தேன்.

மனதைப் பிசையும் ஒரு பதிவு.

இதயத்தைப் பிளந்த சிகிச்சையால், இதயத்தில் இருந்து போட்ட பதிவு, இதயத்தைப் பிளக்குது!

உம் தந்தை நலம் பெற ப்ரார்த்திக்கிறேன்!

சிநேகிதன் அக்பர் said...

மனதை உருக்கும் கவிதை.

உங்கள் தந்தை விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன்.

க. தங்கமணி பிரபு said...

நண்பர் சாரதி,
அப்பா கவிதை ரொம்ப வலிக்கிறது! என்ன சொல்ல? உள்ளடக்கத்தின் கணம் வார்த்தையழகை மீறியதாகயிருப்பதால், மனதில் தோணுவது "முடிஞ்சா ஊருக்கு ஒரு நடை போய் அப்பாவை பார்த்துட்டு வந்திடுங்க!" மருந்து செய்யத்தவறியதையெல்லாம் பாசம் செய்துவிடும். வாழ்த்துக்கள்.

iniyavan said...

அப்பாவை பற்றிய செய்திகள் என்றாலே ரொம்ப புடிக்கும். அதுவும் உங்கள் கவிதை ரொம்ப மனதை உருக்கி விட்டது.

முனைவர் இரா.குணசீலன் said...

/அறிவியல் படித்த அகந்தையில்
இறைவனின் இருப்பையே மறுத்த எனக்கு
தெய்வமாய் தெரிகிறார்கள்
உங்கள் உயிர்காத்த மருத்துவர்கள்/

நெஞ்சை வருடி, சிந்திக்க வைத்த வரிகள்........

செய்தியோடை...