Monday, January 31, 2011

வருஷத்துக்கு ரெண்டே முக்கால் லட்சம் சம்பளம்
நான் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் போது என் வீட்டுக்கு வந்த என் நண்பர்களில் ஒரு சிலரை என் உறவினர்களிடம் அறிமுகப்படுத்தும் போது,

“இவங்கெல்லாம் கேம்பஸ் இண்டர்வியூவில் செலக்ட் ஆனவங்க.
வருஷத்துக்கு ரெண்டே முக்கால் லட்சம் சம்பளம் வாங்க போறாங்க”

என்று பெருமை பொங்க சொல்லித் தொலைத்து விட்டேன்..

இது எத்தகைய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பற்றி சிறிதளவும் அப்போது சிந்திக்கவில்லை.

நீங்கெல்லாம் எங்க உருப்பட போறீங்க? என்று கல்லூரி
வாத்தியாரிடம் அடிக்கடி சாபம் வாங்குன பசங்க நாங்க...

பின்னாளில் படிப்பை முடித்துவிட்டு,
எந்த ஒரு மென்பொருள் நிறுவனத்துக்கும் எங்களிடமிருந்த அளவுக்கதிகமான புத்திகூர்மையும் சாதுர்யமும் தேவைப்படாத காரணத்தினால்,
வேலைத்தேடி சென்னை வந்திறங்கிய மூன்றாவது நாளே எனக்கும், என் நண்பன் சலாவுதினுக்கும் ஒரு வன்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

மாதம் எட்டாயிரம் ருபாய் சம்பளம். சென்னையின் மிக நெரிசலான எக்மோரில் அமைந்திருந்தது அந்த அலுவலகம்...

“சென்னையின் பிரபலமான தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவுக்கு ஆற்றல் மிகுந்த இளம் பொறியாளர்கள்
தேவை” (Young and Energetic Engineers)

ஹிந்து பத்திரிக்கையின் கடைக்கோடியில் வந்த அந்த விளம்பரத்தின் சாராம்சத்தை தான் மேலே நீங்கள் பார்த்தது.. அதன் விளைவே நாங்களிருவரும் அந்நிறுவனத்தில்...


முதல் நாள் மேலாளரை பார்ப்பதற்காக அலுவலகத்தின் வரவேற்பரையில் நெஞ்சு படபடக்க காத்திருக்கிறோம்...

ஒரு செவத்த பெண்ணொருத்தி வரவேற்பறையில் அமர்ந்திருந்தாள். சௌகார்பேட்டையை சேர்ந்தவளாய் இருக்கக்கூடும் என சலா என் காதில் கிசுகிசுத்தான்.

அந்த அலுவலகமே மிக வித்தியாசமாய் இருந்தது. ஏகப்பட்ட இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் வருவதும் போவதுமாய் இருந்தனர். ஒரே கூத்தும் கும்மாளமுமாய் அந்த அலுவலகமே களை கட்டி இருந்தது.


அந்த மேலாளர் ஒரு வட இந்தியக்காரர்(ன்). நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசினார். ஒருவாரம் கடும் பயிற்சி என்றும், அதில் தேறினால் தான் கனடாவில் உள்ள தலைமையகத்திலிருந்து
பணி நியமன ஆணை வரும் என்று சொன்னார்.

மேலும் உங்கள் ஒவ்வொருவரையும் நம்பி கம்பெனி பல லட்சங்கள் முதலீடு செய்யப்போகிறது என்றும் சொன்னார்...

எங்களை போன்று இன்னும் சில நல்லவர்களையும் வேலைக்கு தேர்ந்தெடுத்திருந்தனர்..


பிறகு எல்லோருக்கும் தனித்தனியாக ஒரு பயிற்றுனரை நியமித்தார். அகிலா என்ற பெண் தான் எனக்கு பயிற்றுனர் (ட்ரெயினர்). கொஞ்சம் அதட்டினாலே அழுதுவிடும் முகத்தோற்றம்... சொந்த ஊர் கடலூர் என்றும் தான் ஒரு M.B.A பட்டதாரி என்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்டாள்.


சலாவுதின் ஆவலோடு எதிர்பார்த்தது எதுவுமே நடக்கவில்லை. அந்த மேனேஜர் மிக விவரமானவன் போல, சலாவுதினுக்கு ஒரு முரட்டுப் பையனை ட்ரெயினராக நியமித்திருந்தான்…


மறுநாள் 40 ருபாய்க்கு பாண்டி பஜாரில் வாங்கிய டையை கட்டிக்கொண்டு 8 மணிக்கெல்லாம் இருவரும் ஆபிசில் ஆஜரானோம்.


ஆண் பெண் என அனைவரும் கூடியிருக்கும் ஒரு ஹாலில் வைத்து அறிமுகப்படலம் முடிந்து சராமாரியாக எங்களை கேள்விகள் கேட்டார்கள்.


பிறகு ஆடியோ பிளேயரில் பாட்டை போட்டு எங்களை டான்ஸ் ஆடச்சொன்னார்கள். எனக்கு அப்போது தான் லேசாக சந்தேகம் வந்தது. இது உண்மையான கம்பெனி தானா?

ஒரு குண்டு பெண் வந்து எவ்வித சங்கோஜமில்லாமல் கட்டிடம் அதிர ஆடிட்டு போனாள். கூட்டமே அவளுடைய ஆட்டத்தை கண்டு ஆர்ப்பரித்தது.


அடுத்து சலாவுதினை ஆடச்சொன்னார்கள். அவனும் நடுவில் போய் நின்று “தாண்டியா ஆட்டம் ஆட” பாட்டுக்கு அமர்க்களமாய் ஆடி அப்ளாசை அள்ளிக்கொண்டான்.

அடுத்தது என்னுடைய முறை.
கைகாலெல்லாம் உதற என்னால் ஆடமுடியாது என வம்படியாய் மறுத்து விட்டேன்.. எவ்வளவோ சொல்லி பார்த்தார்கள்..

வேலையே இல்லையென்றாலும் பரவாயில்லை முடியாது என்ற நிலமைக்கு வந்துவிட்டேன்...


பிறகு என்னை ஒதுக்கிவிட்டு காலை 11 மணி வரை பல விளையாட்டுக்கள். 11 மணிக்கு மேனேஜரும் கூட்டத்தில் சேர்ந்துக்கொண்டான்.. அடுத்த அரைமணி நேரம் ஒரே சொற்பொழிவு.


“TODAY’S OTHER PEOPLE MONEY IS TOMORROW OUR’S MONEY”


இன்று அடுத்தவனின் பணம், நாளை முதல் நம் பணம்” என கூட்டமே பெருங்குரலெடுத்து அலறியது..


பின்னர் எல்லோரும் ஆளுக்கு ஒரு ஃபைலை எடுத்துக்கொண்டு கூட்டம் கூட்டமாய் வெளியே கிளம்பினார்கள்...


அகிலா என்னை மின்சார ரயிலேற்றி தாம்பரத்தில் வந்திறக்கினாள். ரயிலில் டை அணிந்து வந்த என்னை கூட்டமே வித்தியாசமாய் பார்த்தது.. வழி நெடுக அகிலாவின் டிப்ஸ் மழை வேறு...தாம்பரத்தில் ஒரு குறிப்பிட்ட ஏரியாவிலிருந்து வீடுவீடாகச் சென்று கதவைத்தட்டி


வீ ஆர் கம்மிங் ஃபிரம் வோடாஃபோன் என்று ஆரம்பித்து நடையாய் நடந்து சிம்கார்டு விக்கிற வேலை என்று தெரிய எனக்கு வெகுநேரம் ஆனது..
வாழ்க்கையே வெறுத்து போனது..


Process Control வாத்தியார் என் மனத்திரையில் வந்து பலமாய் கைதட்டி சிரித்துவிட்டு போனார்...
வாத்தியார் சாபம் பலிச்சுடுமோ..
லேசாக பயம் வந்தது..


மறுநாள் காலை நானும் சலாவும் எட்டு மணிக்கப்புறமும் தூங்கி கொண்டிருக்க என் செல்போன் அழைத்தது.. எடுத்து பார்த்தேன்..
அழைத்தது அகிலாதான்... என்ன சொல்வது என்று தெரியாமல்,
அருகிலிருக்கும் சலாவை உலுக்கி
“டேய் ஆபிசுக்கு கூப்பிடுறாங்கடா”
என்று அவனிடம் கொடுத்தேன்.


அவன் அதை அசால்டாக வாங்கி, அவன் அடிக்கடி சொல்லும் அந்த வார்த்தையை உபயோகித்தான். போங்கடி....................

அதன்பிறகு அவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவே இல்லை...


நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் அது.இப்போதும்கூட எனக்கு ஏதேனும் பணி சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட்டால் வெறும் எட்டாயிரம் காசுக்காக நானும் அவனும் சென்னை வீதிகளில் சிம்கார்டு விற்றதை நினைத்து என்னை நானே தேற்றிக்கொள்வேன்....


வேலைத்தேடி பற்பல கனவுகளோடு சென்னை வந்திறங்கும்
பலரை வந்தவுடன் வாரியணைத்துக்கொள்வது மார்க்கெட்டிங் துறை தான்...


இன்னும் அந்த கும்பல் எங்களைப் போன்ற பல பேரை தேடிக்கொண்டிருக்கும்...

6 comments:

Anonymous said...

comment testing....

வினோத் கெளதம் said...

சாரதி எங்க இருக்கீங்க எப்படி இருக்கீங்க..
ரொம்ப நாள் கழித்து ஒரு பதிவு ..
படிச்சா மாதிரி இருக்கு ஆனா நல்ல இருக்கு..

Anonymous said...

ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு பெரிய கதையோடு வந்திருக்கீங்க.. நலமா சாரதி...

Anonymous said...

வினோத் கெளதம் said...

சாரதி எங்க இருக்கீங்க எப்படி இருக்கீங்க..
ரொம்ப நாள் கழித்து ஒரு பதிவு ..
படிச்சா மாதிரி இருக்கு ஆனா நல்ல இருக்கு..

வினு நலமா? மணவாழ்க்கை எப்படி உள்ளது?

ParthaSarathy Jay said...

@வினோத் கெளதம்
@தமிழரசி
நான் நல்லா இருக்கேன்..

வழக்கம்போல்
வளைகுடா வாழ்க்கை தான்....
நீங்க எப்படி இருக்கீங்க?

வால்பையன் said...

அதே வேலையை முக மகிழ்வுடன் செய்பவர்கள் உங்கள் கண்களுக்கு எப்படி தெரிகிறார்கள் நண்பா!?

இன்றைக்கு உழைக்க தயாராகவில்லையென்றால் நாளை என்ன செய்வதாக உத்தேசம்!?

செய்தியோடை...